

பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடத்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ ரவி மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் காயமடைந்த சுபஸ்ரீ மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேனர்களை இனி வைக்காதீர்கள் என்று தங்கள் கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களையும், கொடிகளையும் வைக்கக் கூடாது என்று அதிமுக தலைமையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிகளிடம் சுபஸ்ரீயின் தந்தை ரவி பேசும்போது, “பேனர் கலாச்சாரத்தின் காரணமாக சாலையில் வைக்கப்பட்ட பேனர் என் மகளின் மீது விழுந்ததில் அவள் மீது லாரி மோதியதில் உயிரிழந்தாள். அவள் எங்களுக்கு ஒரே மகள். எங்களுக்கு நேர்ந்த இந்தத் துயரம் எந்தக் குடும்பத்திற்கும் நேரக் கூடாது. இதுதான் எனது வேண்டுகோள்.
அடுத்த மாதம் வேலை தொடர்பாக என் மகள் கனடா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், எமன் என் மகளை அழைத்துச் சென்றுவிட்டான். அந்தச் சாலையில் பேனர் வைக்கப்படாமல் இருந்திருந்தால் என் மகள் வீடு திரும்பியிருப்பாள்.
இந்த பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும். மேலும் லாரியை ஓட்டுபவர்கள் வேகத்தைக் குறைத்து ஓட்ட வேண்டும். இதற்கான நடவடிக்கையை போக்குவரத்துத் துறை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.