Published : 13 Sep 2019 02:26 PM
Last Updated : 13 Sep 2019 02:26 PM

அதிமுகவினர் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்: ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என, முதல்வரும் துணை முதல்வரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (செப்.13) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகத் தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் மனம் அறிந்து, தேவையை உணர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவது தான் அதிமுக தொண்டர்களின் தலையாயக் கடமையாக இருந்திடல் வேண்டும்.

இந்தக் கருத்தினை கட்டளையாகவும், வேண்டுகோளாகவும், பல நேரங்களில் அதிமுக தொண்டர்களுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவூட்டி வந்திருக்கின்றார். ஜெயலலிதா வழியில் அரசியல் பணியாற்றி வரும் நாங்களும் இந்த வேண்டுகோளை ஏற்று தொண்டர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.

அதிமுக கட்சி நிகழ்ச்சிகளுக்கோ, அதிமுகவினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும், மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்திவிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் அதிமுகவினர் ஈடுபடவே கூடாது. ஒருசிலர் ஆர்வம் மிகுதியாலும் , விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும்போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதனைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x