Last Updated : 13 Sep, 2019 01:53 PM

 

Published : 13 Sep 2019 01:53 PM
Last Updated : 13 Sep 2019 01:53 PM

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை கடத்தல் வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் ஜாமீன் ரத்துக்கு இடைக்காலத் தடை

மதுரை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை கடத்தல் வழக்கில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கும்பகோணம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் என்.திருமகள். இவர் அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகப் பணிபுரிந்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சிலை மாற்றப்பட்டது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திருமகள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திருமகளை போலீஸார் 16.12.2018-ல் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். ஆனால், இவருக்கு கும்பகோணம் கூடுதல் முதன்மை நீதித்துறை நடுவர் மன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் திருமகள் விசாரணைக்கு ஓத்துழைக்கவில்லை. அவர் நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி உள்ளது. இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமை விசாரணை அதிகாரி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து, திருமகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து செப். 9-ல் கும்பகோணம் கூடுதல் முதன்மை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருமகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை முறையாக நிறைவேற்றி வந்துள்ளேன்.

இந்நிலையில் என்னைத் துன்புறுத்தும் நோக்கத்தில் எனது ஜாமீனை ரத்து செய்யக்கோரி விசாரணை அதிகாரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சாட்சியங்களைக் கலைத்தல், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லுதல், அதே குற்றத்தில் மீண்டும் ஈடுபடுதல் போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோர முடியும். எனவே எனது ஜாமீனை ரத்து செய்தது சட்டவிரோதம். ஜாமீன் ரத்து உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் ஜாமீனை ரத்து செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, மனு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டார்.

பின்னர் விசாரணையை செப். 24-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x