

சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகேயுள்ள நடைமேம்பாலத்தில் இருக்கும் எஸ்கலேட்டரில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் அடிக்கடி பழுது ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் கே. பிரதாப் கூறியிருப்பதாவது:
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை பூங்கா, சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொதுமக்கள் சென்று வருவதற்காக தற்காலிகமாக உயரமாக இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்கிறார்கள். நடைமேம்பாலம் உயரமாகவும் பெரிய, பெரிய படிகளாகவும் உள்ளது. கீழே சாலையை கடக்க வேறு வழி இல்லாததால், இந்த நடைமேம்பாலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஏறிச் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே, சென்ட்ரலில் இருந்து வருவோருக்கு வசதியாக ஒரு புறத்தில் மட்டுமே எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்பட்டது. ஆனால், வாரத்தில் இருமுறை திடீரென பழுதாகி விடுகிறது. இதனால், வேறுவழியில்லாமல் மக்கள் படிகள் ஏறிசெல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த நடைமேடை தற்காலிகமானதாக இருந்தாலும், இருபுறமும் எஸ்கலேட்டர் வசதிகளை போட்டு முறையாக பராமரித்தால் நன்றாக இருக்கும். குறைந்தபட்சம் தற்போதுள்ள ஒருபகுதியில் மட்டுமே உள்ள எஸ்கலேட்டரை தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொண்டு பழுது ஏற்படாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், அங்கு தற்காலிகமாக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணிகள் முடிந்தவுடன் தற்காலிக பாலம் அகற்றப்படும். மெட்ரோ ரயில் பணிகளுடன் மக்கள் அந்த பகுதியில் வசதியாக செல்லும் வகையில் பூங்காவில் இருந்து சென்ட்ரல் மற்றும் ரிப்பன் மாளிகைக்கு தனியாக நடை பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்தடவுடன் மக்களுக்கு இந்த சேவை தொடங்கி வைக்கப்படும்’’ என்றார்.