Published : 13 Sep 2019 11:18 AM
Last Updated : 13 Sep 2019 11:18 AM

விசாரணை, சிலைகளை மீட்டதற்கான செலவுகளில் ஒரு பைசா கூட எங்களுக்கு வரவில்லை: பொன்.மாணிக்கவேல்

பொன்.மாணிக்கவேல்: கோப்புப்படம்

சென்னை

சிலைகளை மீட்டதற்கான செலவுகளில் ஒரு பைசா கூட தங்களுக்கு வரவில்லை என, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலில் திருடுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை, பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது. டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இச்சிலை இன்று (செப்.13) சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சென்னை சென்ட்ரலில் பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"நடராஜர் சிலையை சென்னை கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி. உயர் நீதிமன்றத்துக்கே இந்தப் பெருமை சாரும். நீதிமன்றம் தான் இந்தக் குழுவையே உருவாக்கியது. இதற்கென இரண்டரை ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சிலையைக் கொண்டு வருவதில் மத்திய அரசின் இரண்டு பிரிவுகள் உறுதுணையாக இருந்தன. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியத் தொல்லியல் துறை ஆகியவை உதவியாக இருந்தன. இதைவிடப் பெருமை, தமிழகத்தின் நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகேயன், வெளியுறவுத் துறை அதிகாரியாக பெரிதும் உதவினார்.

நான் காவல்துறை அதிகாரி கிடையாது. நீதிமன்றம் உத்தரவிட்டதால் இந்தக் குழுவில் இருக்கிறேன். இக்குழுவில் இருக்கும் அனைவரும் மிகவும் நேர்மையுடன் பணியாற்றினர். இது ஒரு கூட்டு முயற்சி.

சிலை எப்படிப்பட்டது?

இந்தச் சிலை 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. அதனை திருநெல்வேலி போலீஸாரால் கண்டுபிடிக்க முடியாததால், இந்த வழக்கை கண்டுபிடிக்க முடியாத வழக்காகக் கருதினர். இதை யார் வாங்கினார் என்பதை, விசாரணை முடியாததால் சொல்ல முடியாது. இந்தச் சிலையுடன் 50-60 கலாச்சாரமிக்க மிகப்பெரிய தூண்களும் திருடப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதையும் விசாரிக்கிறோம். கிட்டத்தட்ட 4 கண்டங்களைத் தாண்டி ஆஸ்திரேலியாவில் இருக்கும் கேலரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கல்லிடைக்குறிச்சியில் குலசேகரம் உடையார் என்ற பாண்டிய அரசனால் கட்டப்பட்ட கோயிலுக்குச் சொந்தமானது. இந்தச் சிலை காட்சிப்பொருள் அல்ல. இந்தச் சிலையின் மதிப்பு 30 கோடி ரூபாய் என்கின்றனர்.

எதனால் சிலையைக் கொண்டுவரத் தமாதமானது?

யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. இது நல்லதொரு நாள். கிட்டத்தட்ட 20 சிலைகளைக் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் எடுத்தோம். டி.கே.ராஜேந்திரனுக்குக் கடிதம் எழுதினோம். கிட்டத்தட்ட 270 நாட்களாக பதில் இல்லை. திருப்பி எழுதினோம். தாமதம் ஆக்கினர். பல கேள்விகளை எங்களிடம் கேட்டனர். 300 நாட்களுக்குப் பிறகு, அரசுக்கு இதுகுறித்து எழுதியிருப்பதாக பதில் அனுப்பினார். அதன்பிறகு உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டிக்கு கடிதம் எழுதினோம். அந்தக் கடிதம் தூங்கிக்கொண்டிருக்கிறது. நாங்கள் கண்டறியும் தகவல்களை அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்குச் சொல்லாமல் இருந்தனர். அரசாங்கத்தைக் குறை சொல்ல எள்ளளவும் எண்ணம் கிடையாது.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இன்னும் 20 சிலைகள் வர வேண்டும். செம்பியன் மாதேவியின் சிலை 70 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது. அவையெல்லாம் வர வேண்டும்.

இந்தக் குழுவின் பணிக்காலம் முடிவடைய இன்னும் 2 மாதங்கள் தான் இருக்கின்றன, அதற்குள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

இருக்கும் வரை பணி செய்வோம். மற்ற அதிகாரிகள் இருக்கின்றனர். வேலையை நிறுத்த முடியாது.

அரசுக்கு இதனைத் தெரிவித்தீர்களா?

இந்தச் சிலையைக் கைப்பற்றியவுடனே உள்துறைச் செயலருக்கும், டிஜிக்கும் இமெயில் அனுப்பிவிட்டோம். இதுவரை 1,500 மெயில் அனுப்பியுள்ளோம். அதில் 2-3க்குத் தான் பதில் அனுப்பியுள்ளனர். இந்தச் சிலையை குலசேகரம் உடையார் கோயிலுக்குக் கொண்டு செல்கிறோம்.

கோயில் நகைகளைக் கண்டுபிடிக்க முடியாதா?

அதற்குள் நாங்கள் இன்னும் வரவில்லை. இதற்கே திணறிக்கொண்டிருக்கிறோம்.

இந்தக் குழுவை நியமித்தது முதல், நேற்று வரை விசாரணைக்கான செலவுகள், சீக்ரெட் ரிவார்ட் செலவுகள், மற்ற செலவுகளில் ஒரு பைசா கூட எங்களுக்கு வரவில்லை. நான் என்னுடைய ஓய்வூதியத்தில் வேலை செய்கிறேன். மற்றவர்கள் தங்கள் சொந்த செலவில் பணியாற்றுகின்றனர். பணம் இல்லாததால் மூன்று நாட்கள் ரயிலில் பயணித்து வந்திருக்கிறோம்.

எங்களுக்குக் கைது செய்ய அதிகாரம் இல்லை என யாராவது சொன்னால் அது பொய். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் அப்படியில்லை''.

இவ்வாறு பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x