

மதுரை
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீபாவளி முதல் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் சித்திரை திருவிழா, நவராத்திரி, ஆவணி மூலத் திருவிழா உட்பட பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இங்கு சுவாமி ரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். அம்மன் சந்நிதியில் சுவாமி தரிசனத்துக்காகக் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் தீபாவளி முதல் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தக்கார் கருமுத்து தி.கண்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத் தைச் சேர்ந்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோயிலில் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இதற்காக மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக தூய்மை விருது கிடைத்துள்ளது.
இதைக் கொண்டாடும் வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் (அக்.27) லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் லட்டு தயாரிக்கும் இயந்திரம் வாங்கப்பட உள்ளது. இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.