சுடுகாடு அருகே பாலம் அமைக்கக் கோரிக்கை: 3 ஆண்டுகளாகியும் அரசு கண்டுகொள்ளாததால் நூதனப் போராட்டம்

சுடுகாடு அருகே பாலம் அமைக்கக் கோரிக்கை: 3 ஆண்டுகளாகியும் அரசு கண்டுகொள்ளாததால் நூதனப் போராட்டம்
Updated on
1 min read

புதுச்சேரி,

3 ஆண்டுகளாகக் கோரியும் அரசு கண்டுகொள்ளாததால் புதுச்சேரி அருகே பாகூரில் சுடுகாட்டுக்கு செல்லக்கூடிய பாலத்தை கட்டித்தரக் கோரி சவப்பாடையுடன் ஊருக்குள் ஊர்வலமாகச் சென்று அரசு அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அடுத்து பாகூர் கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளன்சந்தை ஆகிய கிராம மக்கள் ,தென்பெண்னை ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டை நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இச்சுடுகாட்டுக்கு செல்லவேண்டுமானால் ஆற்றின் கரையோரமாகத் தான் செல்லவேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு பெய்த கனமழையால் அப்பகுதி சுடுகாட்டுக்குச் செல்லக்கூடிய சாலையும், கான்கிரீட்பாலமும் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. அடித்துச் செல்லப்பட்ட இப்பாலத்தையும், குண்டும் குழியுமாக உள்ள சாலையும், சுடுகாட்டைச் சுற்றியுள்ள மதில் சுவரையும் கட்டித்தரவேண்டும் என்று நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர். ஆனால், பயனில்லை.

இதையடுத்து குருவிநத்தம், சோரியாங்குப்பம் ஆகிய கிராமம் முழுவதும் சவ பாடை ஊர்வலத்தில் தாரை தப்பட்டை முழங்க பெண்கள் ஒப்பாரி வைத்துப் பங்கேற்றனர்.

பாகூர் சோரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரில் ஊர்வலம் நிறைவடைந்தது. போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குருவிநத்தம், சோரியாங்குப்பம் கிளை செயலாளர்கள் சாம்பசிவம், வெங்கடாசலம் ஆகியோர் கூட்டாகத் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

- செ.ஞானபிரகாஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in