

திருவாரூர்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அறிக்கை கொடுக்காமல் இருந்ததைப் போல சுற்றுப் பயணத்தையும் மூடி மறைத்து விடக் கூடாது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், ''மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 177 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்தது. அதேபோன்று இப்பொழுதும் தண்ணீர் வீணாகி வருகிறது.
இதைத் தவிர்க்க அரசு தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். அதைச் செய்யாமல் முதல்வர் இஸ்ரேல் பயணம் செல்வது தேவையற்றது. அரசுமுறைப் பயணமாகத்தான் முதல்வர் பழனிசாமி வெளிநாடுகளுக்குச் சென்றார். அவ்வாறு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டதால், எதற்காக அவர் பயணித்தார், யார் யாரைச் சந்தித்தார், எத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, எவ்வளவு காலத்துக்குள் அவை நிறைவேறும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இதைத் தெரிவிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அறிக்கை கொடுக்காமல் இருந்ததைப் போல இதையும் மூடி மறைத்து விடக் கூடாது.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.