Published : 12 Sep 2019 05:50 PM
Last Updated : 12 Sep 2019 05:50 PM

அரசுப் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறையின் 14 அறிவுறுத்தல்கள்

சென்னை,

பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கும் 14 அறிவுறுத்தல்கள்:

“தற்போது பருவமழை தொடங்கியுள்ள காரணத்தினால் அரசு மற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுக்கும் முறைகள் பற்றிய கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1.மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துதல், குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.

2. வகுப்பறைகளைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும்.

3. வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை தலைமை ஆசிரியருக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் தேங்கிய நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப் படவேண்டும். இதன்மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும்.

4. நல்ல நீர் தேங்குவதால்தான் டெங்கு கொசுக்கள் உருவாகிறது என்றும், அக்கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால்தான் டெங்கு காய்ச்சல் உருவாகின்றது என்ற விழிப்புணர்வினையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்திலும் வீடுகளிலும் நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு கொசுக்கள் உருவாகாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

5. பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் சார்ந்து தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

6. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை, பசுமைப் படை மாணவர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்களை சுகாதாரத் தூதுவர்களாக நியமித்து பள்ளியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மற்றும் அவருடைய பெற்றோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளச் செய்ய வேண்டும்.

7. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். பள்ளி மற்றும் வீடுகளில் வீணாகத் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

8. பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு எப்போதும் சுகாதாரமான குடிநீரை மாணவர்கள் உபயோகிக்க அறிவுறுத்த வேண்டும்.

9. டெங்கு காய்ச்சல் தவிர மஞ்சள் காமாலை மற்றும் சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

10. பள்ளிகளில் சுகாதாரம் குறித்தும் தொற்று நோய்கள் குறித்தும் பலகைகள் மற்றும் பதாகைகள் வைத்திடுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

11. நோய் தடுப்பு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி நோய்க்கான அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனை செய்துகொள்ள மாணவர்களை அறிவுறுத்துமாறும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குதல் வேண்டும்.

12. பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டது என்றாலும் அதை ஆசிரியரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டு பள்ளியில் இருந்தால் அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கோ, பாதுகாவலருக்கோ தெரிவித்து பின்பு மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

13. சுகாதாரம் மற்றும் தூய்மை முக்கியத்துவத்தின் அறிவுரைகளால் மாணவர்களிடம் காணப்படும் மாற்றம் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

14. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கண்ட அறிவுரைகளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x