

மதுரை
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,340 உதவிப் பேராசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் 28.8.2019-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் உதவிப் பேராசிரியர் பணித்தேர்வு முறையில் ஆசிரியர் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கு கூடுதல் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் ஒருசார்பும், பாரபட்சமும் அதிகரிக்கும்.
எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் முறை தொடர்பாக உயர் கல்வித்துறை பிறப்பித்த அரசாணை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் 28.8.2019-ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். தேர்வு நடைமுறை தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு 18.7.2018-ல் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வேலுமணி முன்பு இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 30-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கி.மகாராஜன்