செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 16:44 pm

Updated : : 12 Sep 2019 18:15 pm

 

பச்சை நிறமாக மாறிய பாம்பன் கடல்: பல்லாயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

fishes-dead-in-pamban-sea
பாம்பன் குந்துகால் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

ராமேசுவரம்

பாம்பன் குந்துக்கால் கடற்கரைப் பகுதியில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துக்கால் கடற்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி முறையை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய மீன்பிடித் துறைமுகத்தை அமைத்து வருகின்றனர்.

இந்த குந்துக்கால் கடற்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் நீர் பச்சை நிறத்தில் காணப்பட்டது. மேலும் பல்லாயிரக்கணக்கான மீன்களும் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் இதே போல் குந்துக்கால் கடற்கரைக்கு எதிரே உள்ள மன்னார் வளைகுடா தீவுகளான குருசடை தீவு மற்றும் சிங்கிள் தீவுப் பகுதிகளிலும் மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் இதுகுறித்து மரைக்காயர் பட்டிணத்திலுள்ள மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த ஆராச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள்


தொடர்ந்து மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரையும், இறந்து கிடந்த மீன்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது, "மன்னார் வளைகுடா கடற்பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 'ஆல்கல் புளூம்' எனும் கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும். இதனை மீனவர்கள் 'பூங்கோரை' என்றழைப்பார்கள். மகரந்தச் சேர்க்கைக்காக இந்தப் பாசிகள் கடலில் படரும் போது கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.

கண்களுக்குத் தெரியாத இந்தப் பாசி படர்ந்து காணப்படுவதால் மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி இறக்கின்றன. பெரும்பாலும் ஓரா, கிளி மீன் , கிளிஞ்சான் ஆகிய மீன்களே அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. ஓரிரு நாட்களில் கடல் நிலைக்கு வந்துவிடும். இதனால் மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை," என்றார்.

எஸ். முஹம்மது ராஃபி

மீன்கள்பாம்பன்FishesPamban
Popular Articles

You May Like

More From This Category

More From this Author