Published : 12 Sep 2019 04:43 PM
Last Updated : 12 Sep 2019 04:43 PM

காவல்துறையில் காலிப் பணியிடங்கள், சீர்த்திருத்தச் சட்டம் அமல் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரியும், காவல்துறை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரியும், காவல்துறை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் சென்னையைச் சேர்ந்த அக்பர் அகமது என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், சென்னையில் அமைந்துள்ள பூக்கடை வடக்கு சரக காவல் மாவட்டத்தில் மட்டும் ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், 33 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 393 காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. சென்னையின் மற்ற காவல் மாவட்டங்களில் 791 காவல் அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

தலைநகரமான சென்னையில் காவல் துறையில் இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இதைவிட மோசமான நிலை இருக்கக்கூடும். காவல்துறையினரின் சுமைகளைப் போக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காவல்துறை சீர்திருத்தச் சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புமாறு நான் அளித்த மனு மீது உள்துறைச் செயலாளர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது அக்பர் அகமதுவின் பொதுநல வழக்கு குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x