Published : 12 Sep 2019 04:18 PM
Last Updated : 12 Sep 2019 04:18 PM

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்துக்குப் போட்டியாக வெளிநாடுகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

டெல்லி

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்துக்குப் போட்டியாக வியட்நாம், கம்போடியா, வங்க தேசம் ஆகிய வெளிநாடுகள் உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

தேசிய வர்த்தக வாரியத்தின் உயர் மட்டக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ''2020-ம் ஆண்டோடு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 39 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. அவற்றுக்குக் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு சலுகை நீட்டிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.

அதேபோல மோட்டார் வாகன உற்பத்தில் 25% குறைந்துவிட்டது. உள்நாட்டு விற்பனை, மாநில விற்பனை குறைந்துள்ளது. அதனால் ஏற்றுமதி சலுகைகளை அளிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறோம்.

ஜவுளி உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஜவுளி ஏற்றுமதியிலும் முதலில் இருக்கிறோம். நமக்குப் போட்டியாக வியட்நாம், கம்போடியா, வங்க தேசம் ஆகிய நாடுகள் இருக்கின்றன. கடுமையான போட்டியைச் சமாளிக்க, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இலவச வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒரு பொருளை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலையை மாற்றி பல பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கவேண்டும் என்று கடந்த கூட்டத்தில் கேட்டிருந்தோம். அந்தக் கோரிக்கையையும் தற்போது மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்'' என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x