

சிவகங்கை
சிவகங்கை அருகே 71 வயதான சாமியார் ஒருவர் ஜீவ சமாதி அடைவதாகக் கூறியுள்ளதால், அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர்.
சிவகங்கை அருகே உள்ள கிராமம் பாசாங்கரை. அங்கு இருளப்ப சாமிகள் என்னும் 71 வயது சாமியார் ஆன்மிக நாட்டம் கொண்டு வசிக்கிறார். இன்று நள்ளிரவு ஜீவ சமாதி அடைய உள்ளதாக சில வாரங்களுக்கு முன்னதாகவே அறிவித்திருந்தார். இதற்காகக் கடந்த ஒரு மாதமாக உணவைத் தவிர்த்து, தண்ணீரை மட்டுமே பருகி வருகிறார்.
தனக்குச் சொந்தமான இடத்தில், நள்ளிரவில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் முக்தி அடைவதாகவும் அந்த இடத்தில் ஜீவ சமாதி எழுப்ப வேண்டும் என்றும் சாமியார் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து சமாதியை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 9 உறை கல்கள் இதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளன. சாமியார் உட்கார்ந்த நிலையில் சமாதி அடைய உள்ளார்.
இந்தத் தகவல் பரவியதை அடுத்து சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் சாமியாரைக் கண்டு வணங்கிவிட்டுச் செல்கின்றனர். சாமியார் இறந்த பிறகே, அவரின் உடல் சமாதியில் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.