செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 14:34 pm

Updated : : 12 Sep 2019 14:34 pm

 

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்படத்  தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

highcourt-barred-o-raja-as-milk-society-chairman
ஓ.ராஜா: கோப்புப்படம்

மதுரை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா செயல்படத் தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் "நான் பழனிசெட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளேன். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி அன்று மதுரை ஆவின் சார்பாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு,17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் இருந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தனியாக ஆரம்பிக்கப்பட்டது. தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் 13 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய நிலையில் இருந்தபோது. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கதில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அன்று பதவியேற்றனர்.

அதில் தற்போது தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். எனவே தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 17 உறுப்பினர்கள் செயல்படத் தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், 17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானது. எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கதில் இடைகால நிர்வாகக் குழு, 17 உறுப்பினர்கள் செயல்பட இடைக்காலத் தடை விதித்தும், மேலும் மனு குறித்து பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர் மற்றும் ஓ.ராஜா உட்பட அனைத்து உறுப்பினர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கி.மகாராஜன்

ஓ.ராஜாஅதிமுகசென்னை உயர் நீதிமன்றம்O rajaAIADMKChennai highcourt
Popular Articles

You May Like

More From This Category

More From this Author