Published : 12 Sep 2019 10:28 AM
Last Updated : 12 Sep 2019 10:28 AM

சிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டு குமிழி மடைத்தூண் கண்டுபிடிப்பு

கோவானூர் பெரிய கண்மாயில் காணப்படும் 18-ம் நூற்றாண்டு குமிழி மடைத்தூணை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் காளிராசா.

இ.ஜெகநாதன்

சிவகங்கை

சிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குமிழி மடைத்தூண் கோவானூர் பெரிய கண்மாயில் காணப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அளவைக்கல், குத்துக்கல் என்று கூறுகின்றனர். இந்தத் தூண்களின் உள்பகுதியில் கல்வெட்டுகள் உள்ளன.

இதனை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா கூறியதாவது: கோவானூரைச் சேர்ந்த ஆசிரியர் அழகுபாண்டி என்பவர் கண்மாயில் இருந்த இரட்டைத் தூண் குமிழி மடை குறித்து தகவல் கொடுத்தார்.

சோழ, பாண்டிய மன்னர்கள் காலங்களில் ஏரி, குளங்களில் குமிழி மடை அமைப்பை ஏற்படுத்தினர். நீரையும், வண்டல் மண்ணையும் தனித்தனியே வெளியேற்றும் வகையில் இவை அமைக்கப்பட்டிருக்கும். இந்த மடைகள் தற்போது கரையோரங்களில் காணப்படும். ஆனால், கோவானூர் குமிழிமடை கண்மாயின் பள்ளமான மையப்பகுதியில் காணப்படுகிறது.

சுண்ணாம்பு, செங்கல் காரைக்கட்டு அரை வட்ட வடிவில், மடைத்தூணில் இருந்து கரையை நோக்கிச் செல்கிறது. மடைத்தூண் 9 முதல் 10 அடி உயரம் இருக்கிறது. இரண்டு தூணுக்கும் இடைப்பட்ட படுக்கைக் கற்கள் உடைந்து காணப்படுகின்றன. பொதுவாக மடைத்தூண்களின் மேற்பகுதி அரை வட்ட வடிவில் காணப்படும். ஆனால், இங்கு தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு உள்ளது.

கல்வெட்டுத் தகவல்களைப் பார்க்கும்போது, சிவகங்கை சீமை 1729-க்கு பின்புதான் தனியரசாகச் செயல்படத் தொடங்கியது. அதற்கு முன்பு சேதுபதி மன்னர்கள் ஆட்சியின் கீழ் சிவகங்கை இருந்தது. 1708-ல் சேதுபதி நாட்டை, கிழவன் சேதுபதி ஆண்டு வந்தார். ரகுநாத முத்துவீரத்தேவராகிய பூவணனாத தேவர் என்பவர் கோவானூர் பகுதியில் அரசப் பிரதிநிதியாக இருந்துள்ளார். அவர்களது காலத்தில் காளிசுரம் பிள்ளை மேற்பார்வையில் இந்த மடை கட்டப்பட்டிருக்கலாம்.

சேதுபதி மன்னர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான கண்மாய்கள் அமைத்ததோடு, சோழர், பாண்டியர்களைப் போன்று மடைத்தூண்களையும் அமைத்துள்ளனர், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x