தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைக்காக ராமஜெயம் கொலை வழக்கை கிடப்பில் போட்ட சிபிஐ?- விசாரணையை மீண்டும் துரிதப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைக்காக ராமஜெயம் கொலை வழக்கை கிடப்பில் போட்ட சிபிஐ?- விசாரணையை மீண்டும் துரிதப்படுத்த வலியுறுத்தல்
Updated on
2 min read

அ.வேலுச்சாமி

திருச்சி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைக்காக ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது .

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 29.3.2012-ம் தேதி திருச்சி-கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியி லுள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். திருச்சி மாநகர போலீஸார் 10 தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இவ்வழக்கு கடந்த 2012 ஜூன் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களாலும் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை.

இதையடுத்து, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ராமஜெயம் மனைவி லதா கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். அதனடிப்படையில், இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கடந்த 7.11.2017 அன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், 3 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்குமாறும் அறிவுறுத்தியது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் குழுவினர் விசாரணையைத் துரிதப்படுத்தினர். இவ்வழக்கு குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் பெறுவதற்காக பிரத்யேக தொலைபேசி, செல்போன் எண் களையும் அறிவித்தனர். ஆனாலும், குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அதன்பிறகு இவ்வழக்கை சிபிஐ அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கே.என்.நேரு தரப்பு வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் கூறியதாவது:

கடந்த 2012-ம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கிய நிலையில், 1000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி, 300-க்கும் மேற்பட்டோ ரிடம் சிலவற்றை எழுதி வாங் கினர். உயர் நீதிமன்றத்தில் 8 ரகசிய அறிக்கைகளையும் தாக்கல் செய்தனர். ஆனாலும், கடைசி வரை குற்றவாளியை கண்டு பிடிக்க முடியாததால், 2017-ம் ஆண்டு இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, சிபிஐ அதிகாரி கள் திருச்சியில் முகாமிட்டு விசாரணையை தொடங்கினர். அந்தச் சூழலில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர் பான வழக்குகள் அனைத்தையும் சிபிஐ-க்கு மாற்றி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, ராமஜெயம் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணையின் சிறப்புக்குழுவில் நியமிக்கப்பட்டனர்.

அதற்குப்பின் ராமஜெயம் கொலை வழக்கு குறித்து எந்தவிதமான விசாரணையும் நடைபெறவில்லை என்பதை அறிய முடிகிறது. இதனால் விசாரணையை சிபிஐ கிடப்பில் போட்டுவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ மீண்டும் துரிதப்படுத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

விசாரணையின் கோணம் மாற வேண்டும்

ஆர்.பாஸ்கரன் மேலும் கூறியபோது, “ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் விசாரணை அமைப்புகள் மாறுகின்றனவே தவிர, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடக்கத்தில் விசாரித்த திருச்சி மாநகர போலீஸார், ராமஜெயத்தின் குடும்பத்தினர், நண்பர்களைச் சுற்றியே விசாரணை வளையத்தை அமைத்தனர். அதற்குபின் விசாரிக்க வந்த சிபிசிஐடி அதிகாரிகளும், திருச்சி மாநகர போலீஸார் விசாரித்தவர்களையே மீண்டும் மீண்டும் விசாரித்தனர். ஆனாலும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது இவ்வழக்கை கையாண்டு வரும் சிபிஐ அதிகாரிகளாவது, மீண்டும் இதே கோணத்தில் விசாரணை நடத்தாமல், வேறு கோணங்களில் விசாரணையை மாற்ற வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in