Published : 12 Sep 2019 10:11 AM
Last Updated : 12 Sep 2019 10:11 AM

அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாட்டால் ஓசூரில் விளையும் இயற்கை மலர்களின் விற்பனை பாதிப்பு: சீன செயற்கை மலர்களுக்கு தடை விதிக்க கோரிக்கை

ஜோதி ரவிசுகுமார்

ஓசூர்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை பிளாஸ்டிக் மலர்களின் விற்பனை அதிகரித்து வருவதால், ஓசூரில் விளையும் இயற்கை மலர்களின் விற்பனை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இதமான தட்பவெட்பநிலை, வளமான மண் ஆகியவற்றால் வண்ணமிகு ரோஜா மலர், அலங்கார மலர்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட கொய்மலர்கள் மற் றும் மல்லிப்பூ, சாமந்திப்பூ உட்பட 30-க்கும் மேற்பட்ட மலர்கள் உற்பத்தியில் விவசாயி கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளையும் தரமான மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வீடு மற்றும் திருமண மண்டபங்களை அலங்காரம் செய்ய பயன்பட்டு வந்த இயற்கையான மலர்களின் இடத்தை பிளாஸ்டிக் மலர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளன. சீன செயற்கை மலர்களின் விற்பனை அதிகரிப்பு, ஓசூரில் மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. ஆகவே பிளாஸ்டிக் மலர் விற்பனையை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டப்பயிர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:

ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமைக்குடிலில் விளையும் தரமான ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா, மேரிகோல்டு (சாமந்தி) உள்ளிட்ட மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆகவே இப்பகுதியில் சிறு,குறு, நடுத்தர விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் என மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மலர் சாகுபடியை நம்பி சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் இருந்து பிளாஸ்டிக் மலர்களின் வரத்து அதிகரித்து வருவதால் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் மலர்கள் வரவால் நடப்பாண்டில் ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட இயற்கை மலர்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.150 கோடி வரை ஓசூர் பகுதி மலர் உற்பத்தி யாளர்களுக்கு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை வாங்கப்பட்ட பிளாஸ்டிக் மலர்களை நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்களும் பிளாஸ்டிக் மலர்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியலில் பிளாஸ்டிக் மலர்கள் இடம் பெறவில்லை. ஆகவே சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மலர்களையும் தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியலில் இணைக்க வேண்டும். அதிகரித்து வரும் சீன பிளாஸ்டிக் மலர்கள் விற்பனையை தடை செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x