Published : 12 Sep 2019 10:05 AM
Last Updated : 12 Sep 2019 10:05 AM

ஒயிலாட்டத்துக்கு உயிரூட்டும் குக்கிராம இளைஞர்கள்!

க.சக்திவேல்

கோவை அன்னூர் கோவில்பாளையம் அருகே குன்னத்தூர்புதூர் ஊராட்சிக்கு உட்பட்டது நாதேகவுண்டன்புதூர் கிராமம். இந்தக் கிராமத்தில் 25 குடும்பங்களே வசிக்கின்றன. பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை மறந்து வரும் சூழலில், பேருந்துவசதிகூட இல்லாத இக்கிராமத்தில், நாட்டுப்புற கலைக் குழுவை உருவாக்கி, சிறப்பாக நடத்தி வருகின்றனர் கிராம இளைஞர்கள்.

அவர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றை காணச் சென்றோம். கிராம எல்லையில், மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் வந்து இறங்கிய ஊர்மக்கள் சுற்றி அமர்ந்திருக்க, அனைவருக்கும் வணக்கம் கூறி தொடங்கினர் ஒயிலாட்டத்தை.

பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் சீருடை அணிந்து, கைகளில் ரிப்பன் கட்டி, கால்களில் சலங்கை அணிந்து, வரிசையாகவும், நேர்த்தியாகவும் மின்னொளியில் ஆடத் தொடங்கினர். பம்பை கலைஞர்கள் வாசிக்க, நாட்டு நடப்பு குறித்து பாடினர் பாடகர்கள். ஒருங்கிணைப்பாளரின் விசில் ஒலி, ஆட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்ததை தெரிவித்தது. நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்த ஆட்டம், கடைசியில் கரவொலியுடன் நிறைவுபெற்றது.

இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்தி, வள்ளி கும்மியையும், ஒயிலாட்டத்தையும் அந்தப் பகுதியில் உயிர்பெறச் செய்துள்ள கலைக் குழுவை ஒருங்கிணைக்கும் பிரவீன்குமாரிடம் பேசினோம்.

"சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்றவை கொங்கு பகுதியில் பிரபலமான கலைகள். ஆனால், காலப்போக்கில் வெகு சில இடங்களில் மட்டுமே இவை தொடர்ந்து நடைபெறுகின்றன. வருங்கால சந்ததியினரிடம் இந்தக் கலைகளை கொண்டுசேர்க்கும் நோக்கில் `சிம்மக் குரல் நாட்டுப்புற கலைக்குழுவை' கடந்த மார்ச் மாதம் தொடங்கினோம்.
அப்போதிலிருந்து தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பயிற்சி வகுப்புகளை நடத்தினோம். இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளம்பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என 52 பேர் பயிற்சியில் இணைந்தனர். ஏறத்தாழ 6 மாத தொடர் பயிற்சிக்குப் பின், சுற்றுவட்டாரங்களில் உள்ள 6 கிராம மக்களை அழைத்து, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி நாதேகவுண்டபுதூரில் நிகழ்ச்சியை அரங்கேற்றினோம். ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதுவே எங்கள் உழைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி" என்றார்.

வள்ளி கும்மியில் வள்ளி-முருகன் திருமண கதையை பாடிக் கொண்டே ஆடுகின்றனர். ஒயிலாட்டம் மூலம் நாட்டு நடப்பையும், பண்டைய வாழ்க்கை முறைகள் குறித்தும் எடுத்துரைக்கின்றனர். இதற்காக கலைக்கழுவின் பாடகர்கள் விக்னேஷ்வரன், ரங்கசாமி, பிரவீன்குமார் ஆகியோர், தலைப்புக்கேற்ப பாடல்களை எழுதி மெட்டமைக்கின்றனர்.

"கோயில் விழாக்களுக்கு எங்கள் கலைக் குழுவை அழைப்பவர்களுக்கு கட்டணமின்றி ஒயிலாட்டம், கும்மியாட்டம் நிகழ்ச்சிகளை நடத்தித் தருகிறோம். போக்குவரத்து செலவை மட்டும் அழைப்பவர்கள் ஏற்றுக்கொண்டால் போதும். இதுதவிர, நீர்நிலைப் பாதுகாப்பு, நன்னெறிகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகள் அழைத்தாலும், அங்கும் கட்டணமின்றி நிகழ்ச்சிகளை நடத்திதர தயாராக உள்ளோம்" என்கின்றனர் சிம்மக்குரல் கலைக் குழுவினர்.

நிகழ்ச்சி முடிந்துவிட்டது; அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். ஆனாலும், நீண்ட நேரம் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது அந்த கும்மிப் பாடல். "நாதேகவுண்டன்புதூர் நாங்க நாட்டுப்புறத்த காக்க வாரோம்... சிம்மக்குரல் பெயரெடுத்து நாங்க சிங்காரமா ஆட வாரோம்..."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x