Published : 12 Sep 2019 10:03 AM
Last Updated : 12 Sep 2019 10:03 AM

ஆட்டோமொபைல் துறை பிரச்சினைக்கு தீர்வு தரும் அதிநவீன சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜின்!- பிஎஸ்.6 தொழில்நுட்பத்துக்கு மாற்றாக அமையும் 

ஆர்.கிருஷ்ணகுமார்

வாகன உற்பத்தி (ஆட்டோமொபைல்) துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதுடன், பிஎஸ்.6 தொழில்நுட்பத்துக்கு மாற்றாகவும் அதிநவீன சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜின் அமையும். ஜப்பான் நாட்டு அரசு இத்தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்த பெரிதும் ஊக்குவிக்கிறது. இந்தியாவிலும் இத்தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்த முயற்சித்து வருகிறேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் சௌந்திரராஜன் குமாரசாமி.

நாடு முழுவதும் ஆட்டோமொபைல் தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பிஎஸ்.6 தொழில்நுட்ப அடிப்படையிலான வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்படும் என்று கொள்கை அளவில் மத்திய அரசு அறிவித்துள்ளதும், இத்தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஒரு காரணமாகும்.

இந்தப் பிரச்சினைக்கு அதிநவீன சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜின் தீர்வளிக்கும் என்று கூறுகிறார் சௌந்திரராஜன் குமாரசாமி. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகேயுள்ள புள்ளசெல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கோவை பிஎஸ்ஜி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொழில்முனைவோர் பூங்காவில் என்.ஜி. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

10 ஆண்டு ஆராய்ச்சியின் பலன்...

பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மூலம் ஏற்படும் மாசு பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், 10 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஐ.சி. இன்ஜினைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த இன்ஜின் டிஸ்டில்டு வாட்டரில் இருந்து ஹைட்ரஜன், ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து, இன்ஜினுக்கு எரிபொருளாக பயன்படுகிறது. இந்த இன்ஜின் மூலம் இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி, படகு, கப்பல், ஜெனரேட்டர் என அனைத்தையுமே இயக்கலாம்.

சுமார் 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டரில் இருந்து ஒரு கிலோ ஹைட்ரஜனை பிரித்தெடுக்க, ரூ.20 மட்டுமே செலவாகும். இதன் மூலம் 100 சி.சி. திறன் கொண்ட இருசக்கர வாகனத்தை 200 கிலோமீட்டர் தொலைவுக்கு இயக்க முடியும். இதேபோல, காரை 60 கிலோமீட்டர் தொலைவுக்கும், லாரி, பேருந்து போன்றவற்றை 10 கிலோமீட்டர் தொலைவுக்கும் இயக்க முடியும். இன்ஜின் திறன் அதிகமாக இருப்பதுடன், வழக்கமான இன்ஜினிலிருந்து வருவதுபோல கார்பன் வாயு வெளிவராமல், ஆக்சிஜனும், நீராவியும் மட்டுமே வெளியேறும் என்பதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது என்று கூறும் சௌந்திரராஜன் குமாரசாமி, அண்மையில் ஜப்பானில் இந்த இன்ஜினை அறிமுகம் செய்துள்ளார். கோவை வந்த அவரை சந்தித்தோம்.

ஜப்பானில் அறிமுகம் செய்தது ஏன்?

"1997-ல் ஜப்பான் நாட்டில் உள்ள க்யாட்டோ நகரில்தான், ஐக்கிய நாடுகள் சபை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டை நடத்தியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக இதில் பல்வேறு பரிந்துரைகள் வெளியிடப்பட்டன. இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜினை ஜப்பானில் அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறேன். ஜப்பான் அரசும், டோக்கியோ மெட்ரோபாலிட்டன் நிர்வாகமும் எனக்கு பெரிதும் ஊக்கமளித்து வருகின்றன.

அங்கு அலுவலகம் திறக்க, டோக்கியோ மெட்ரோபாலிட்டன் ஆலோசகர் ஹிரோசிகவாய் உதவினார். மேலும், அங்குள்ள ஆட்டோ
மொபைல் நிறுவனங்களில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜினை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளேன். இதற்காக மீண்டும் ஜப்பான் செல்ல உள்ளேன். இதேபோல, இந்தியாவில் உள்ள பல்வேறு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிலும் இந்த இன்ஜினை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறேன்.

இந்திய அரசின் கீழ் இயங்கும், பாரத் ஸ்டேஜ் எமிஷன் ஸ்டாண்டர்ட்ஸ் நிறுவனம் (பி.எஸ்.இ.எஸ்.), வாகன இன்ஜின்களில் இருந்து வரும் புகையின் அளவை வரையறுத்துள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் புகை வெளியிடும் வாகனங்களை இயக்க அனுமதி மறுக்கப்படும் என்றும் தெரிவித்தது. மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி பிஎஸ்.2, 3, 4 என்று இவை வரையறுக்கப்பட்டன. 2017-ல் பி.எஸ்.4 விதிகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் முடிவாக, 2020-ல் பிஎஸ்.6 தொழில்நுட்ப வாகனங்களை இயக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

நடைமுறைச் சிக்கல்கள்...

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே. அதேபோல, மாற்று மற்றும் மரபுசாரா எரிசக்தி விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மின்சாரத்தால் இயங்கும் பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. எனினும், இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. பேட்டரிக்குத் தேவையான மின்சாரத்தை அனல் மின் நிலையங்கள் மூலம் தயாரிக்கும் சூழலில், அதுவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மை. பேட்டரி சார்ஜ் நிலையங்களையும் பல இடங்களில் அமைக்க வேண்டும்.

மேலும், தற்போதுள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள், பேட்டரி வாகனங்களைத் தயாரிக்க பல கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அதிநவீன சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜினைத் தயாரிக்க, இதுபோன்ற எவ்வித சிரமமும் இருக்காது. வாகனத் தயாரிப்பாளர்கள் நடைமுறையில் உள்ள கட்டமைப்பை பயன்படுத்தி, சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜினைத் தயாரிக்கலாம். இந்த தொழில்நுட்பம், பெட்ரோல், டீசலைக் காட்டிலும் 85 சதவீதம் மலிவானது.

திறன் மிகுந்த இன்ஜின்!

இந்த இன்ஜினிலிருந்து நீராவி மட்டுமே வெளி வரும். எந்த நச்சு, ரசாயன வாயுக்களையும் இந்த இன்ஜின் வெளியிடாது. இதனால், சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் இன்ஜினைக் காட்டிலும் 3 முதல் 4 மடங்கு திறனும் அதிகமாக இருக்கும். மேலும், ஹைட்ரஜன் எரிவாயு நிரப்பும் நிலையங்களை எங்கும் அமைக்கத் தேவையில்லை. இதற்குப் பதிலாக, டிஸ்டில்டு வாட்டர் நிரப்பும் நிலையங்களை அமைத்தால் போதுமானது.

பிஎஸ்.6 தொழில்நுட்பத்தைக் கண்டு வாகனத் தயாரிப்பாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதற்கு மாற்றான சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஐ.சி. இன்ஜின் தொழில்நுட்ம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார் நம்பிக்கையுடன் சௌந்திரராஜன் குமாரசாமி.

ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பமும், சுற்றுச்சூழல் தொடர்பாக உருவாகும் விழிப்புணர்வும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் இருப்பு குறைந்துகொண்டே வருவதும், வாகனங்களின் தயாரிப்புகளில் நிச்சயம் மாற்றத்தை
ஏற்படுத்தும். ஒருகட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் தீர்ந்துவிடும் சூழல் உருவானால், மாற்று சக்தியின் பயன்பாடு நிச்சயம் தேவைப்படும்.

எனவே, புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாகவாவது நடைமுறைக்கு கொண்டுவருவது அவசியம். இந்த வகையில், வாகன உற்பத்தித் துறையும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பெட்ரோல், டீசல் போன்ற மரபுசார்ந்த எரிசக்தியைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கான, மாற்றுத் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜின், எதிர்காலத்தில் முக்கிய இடத்தை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து, நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பது சௌந்திரராஜன் குமாரசாமியின் கோரிக்கை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மீதும், தொழில் துறை மேம்பாட்டின் மீதும் அக்கறை கொண்டவர்களின் கோரிக்கையுமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x