

பெ.ஸ்ரீனிவாசன்
கடும் நெருக்கடியில் உள்ள பின்னலாடைத் துறையின் பிரச்சினைகளைக் களைய மத்திய அரசு உதவ வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.
மதுரையைச் சேர்ந்த ஆர்.சரவணன், 20 ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி திருப்பூர் வந்தார். பின்னலாடை நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த சரவணன், ஐந்து ஆண்டுகளில் சிறிய பிரிண்டிங் நிறுவனம் தொடங்கினார். சொந்த வீடு, கார் என வளர்ந்த அவரது நிலை, கடந்த 2 ஆண்டுகளில் தலைகீழாக மாறியது. தொழிலில் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக வீடு, காரை விற்ற அவர், தற்போது மீண்டும் பின்னலாடை நிறுவனத்திற்கே வேலைக்குச் செல்கிறார்.
"கடந்த இரு ஆண்டுகளில் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். வாரம் ரூ.50 ஆயிரம் தர வேண்டிய பெரிய நிறுவனம், ரூ.10 முதல் ரூ.15 ஆயிரம் மட்டுமே தந்தனர். இதனால் எனக்கு கடன் சுமை அதிகரித்து, வட்டிக்கு கடன் வாங்கி, அதை அடைக்க வீடு, காரை விற்கும் நிலை உருவானது. பிழைப்புக்காக மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டேன்" என்றார் வேதனையுடன்.
திருப்பூரில் ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஏராளமான தொழிலாளர்கள் தொழில்முனைவோராக மாறினர். ஆனால், தற்போது மீண்டும் பலர் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கச் செயலர் நந்தகோபாலிடம் பேசினோம். "திருப்பூர் தொழில் துறை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஜாப் ஆர்டர் முறையில் செயல்படும் சிறு, குறு நிறுவனங்களை பெரிதும் பாதித்துள்ளது. பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. முன்பு டெலிவரிக்கான தொகை சனிக்கிழமைகளில் கிடைத்துவிடும். தொழிலாளர்களுக்கும் ஊதியம் அளித்துவிடுவோம். ஜி.எஸ்.டி.க்குப் பின்னர் பெரிய நிறுவனங்களில் இருந்து பணம் கிடைக்க 3 மாதங்களாகிறது. தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். நாளடைவில் வட்டி கட்ட முடியாமல்போய், தொழிற்கூடத்தையே மூடும் நிலை உருவாகிறது.
பவர் டேபிள், கட்டிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், காஜா பட்டன், செக்கிங், அயர்னிங், பேக்கிங் என அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் இதே நிலை தான். பல நிறுவனங்களில் தற்போது வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கிறது. எனவே, ஜாப் ஆர்டர் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பைக் குறைப்பது அவசியம்" என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறும்போது, "ஏற்கெனவே தொழிலாளர் பற்றாக்குறை, மத்திய அரசின் சலுகை குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் தொழில் துறை, ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு தொடர் நெருக்கடியை சந்திக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள், ஜாப் ஒர்க் அடிப்படையில் செயல்படும் சிறு, குறு நிறுவனங்களையே சார்ந்துள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பும், நடைமுறைகளும் சிறு, குறுந் தொழில்முனைவோரை பெரிதும் பாதித்துள்ளன. சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் பலரும் தொழிலை விட்டுச் சென்று விட்டனர். மேலும், காதர்பேட்டை போன்ற சந்தைகளில் பெருமளவு ஜவுளி தேக்கமடைந்துள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதையெல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
திருப்பூரில் சர்வதேச பிராண்ட் உற்பத்தி நிறுவனங்கள் பல உள்ளன. அந்த நிறுவனங்களே சம்பள நாளான சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. சிஐடியு பனியன் சங்கச் செயலர் சம்பத் கூறும்போது, "பல நிறுவனங்கள் சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளன. கடந்த 4 மாதங்களில் வேலையிழப்பு அதிகரித்துள்ளது. எவ்வளவு பேர் வேலை இழந்துள்ளனர் என்ற கணக்குகூட அரசிடமே இல்லை" என்றார்.
பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பிரச்சினைகளுடன், சர்வதேச போட்டியும் அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 9 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பின்னலாடைத் துறை மீது மத்திய அரசு கருணை காட்டி, பிரச்சினைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று ஜவுளித் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறும்போது, "தொழிலில் மந்த நிலை இருப்பது உண்மைதான் சிறு, குறு நிறுவனங்களின் பிரச்சினைகளை தொடர்ந்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறு, குறு நிறுவனங்களும், ஆர்டர்கள் எடுப்பது மற்றும் நிறுவனங்களை நடத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.