Published : 12 Sep 2019 09:58 AM
Last Updated : 12 Sep 2019 09:58 AM

கும்பி எரியுது, குடல் கருகுது... வாழ்வாதாரத்தை இழக்கும் சிறு, குறுந்தொழில் துறையினர்!

ஆர்.கிருஷ்ணகுமார்

ஆர்டர்கள் குறைவு, உற்பத்தி நிறுத்தம், வேலையாட்கள் வெளியேற்றம் என பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் சிறு, குறுந் தொழில்துறையினர், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், தொழில் நிறுவனங்களை முற்றிலும் மூடிவிடும் நிலை உருவாகும் முன் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, சிறு, குறுந் தொழில் துறைக்கு மூச்சுக்காற்றை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதுமே `ஆட்டோமொபைல்ஸ்' எனப்படும் வாகன தயாரிப்புத் துறையில் பாதிப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை தொடங்கிவிட்டது. வாகனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய தொழில் நகரமாகத் திகழ்வது கோவை. கோவை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழில்நிறுவனங்கள் உள்ளன. நாட்டிலேயே அதிக அளவுக்கு சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் இருப்பது கோவை மாவட்டத்தில் மட்டும்தான். இதனால், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும், சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.

கோவையில், பொறியியல் துறை சார்ந்த உதிரி பாகங்கள், ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள், வெட் கிரைண்டர்கள், ராணுவ
தளவாடங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள், ஆட்டோமொபைல்ஸ்-க்கான உதிரி பாகங்கள் என பல்வேறு பொருட்
களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக, 15 ஆயிரம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில், மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் வாகன கியர் பாக்ஸ், சிலிண்டர், பிரேக் ட்ரம், பிரேக் ஷூ, செயின் பிளேட், ஜாயின்ட், கனெக்டிங் ராடு மற்றும் நட்டு, போல்டு உள்ளிட்டவை, நாடு முழுவதும் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களால் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கு சுமார் ரூ.300 கோடி அளவுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

ஏற்கெனவே பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் நெருக்கடிக்கு உள்ளாகிய சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள், அண்மைக்கால ஆட்டோமொபைல் துறை பிரச்சினையால் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜெ.ஜேம்ஸிடம் பேசினோம். "கடந்த 3 மாதங்களாகவே, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான ஜாப் ஆர்டர்கள் படிப்படியாக குறையத் தொடங்கின. தற்போது மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களே வாரத்தில் 3 நாள், 4 நாட்கள் விடுமுறையை அறிவித்துவிட்டன. பல நிறுவனங்கள் வேலைநேரத்தையும் குறைத்துவிட்டன.

இதன் எதிரொலியாக, சிறு, குறுந் தொழில்நிறுவனங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட உற்பத்தி குறைந்துவிட்டது. வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து, அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். சனி, ஞாயிறு தவிர, மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளோம். ஒரு தொழிற்கூடத்தில் 12, 16 மணி நேரங்கள் வேலை நடைபெற்ற நிலை மாறி, 8 மணி நேரம் வேலை நடப்பதே பெரிய விஷயமாகிவிட்டது. பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இந்த நெருக்கடியை அரசு உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வங்கிகளில் கடனை வசூலிப்பதற்கான காலக்கெடுவை ஒரு வருடத்துக்கு தள்ளிப்போட வேண்டும். வட்டிகளை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரியில் தொழில் துறையினருக்கு திரும்பத் தர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். தாமதமாக வரி செலுத்துவோருக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்வதுடன், ஏற்கெனவே செலுத்திய அபராதத் தொகையையும் மீண்டும் திருப்பித்தர வேண்டும்.

ரயில்வே, பாதுகாப்பு மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும், தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களில் 25 சதவீதத்தை சிறு, குறுந் தொழில்முனைவோரிடம் வாங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இதற்குத் தடையாக உள்ள சட்டம், நடைமுறைகளைத் தளர்த்த வேண்டும்.

ஜாப் ஆர்டர் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த தொழில் துறைக்கும் 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களின் வங்கி வரவு-செலவு அடிப்படையில், 20 சதவீதம் தொழிற்கடனுதவி வழங்க வேண்டும். வாடகை செலுத்தவும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் இது உதவும்" என்றார்.

ரூ.500 கோடி மோட்டார் பம்ப்செட் தேக்கம்!

இதேபோல, கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் மோட்டார் பம்ப்செட் நிறுவனங்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இது தொடர்பாக கோவை மோட்டார் பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் (காப்மா) தலைவர் கே.மணிராஜிடம் பேசினோம். "கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப் செட் நிறுவனங்களும், 50-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களும் உள்ளன. இவற்றை நம்பி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

கடந்த சில நாட்களாக விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதால், ரூ.500 கோடி மதிப்பிலான மோட்டார் பம்ப்செட்கள் தேக்கமடைந்துள்ளன. வரும் தீபாவளிக்கு போனஸ் தொகையை எப்படி வழங்குவது என்ற கேள்வி, எல்லா தொழில்முனைவோரிடமும் உள்ளது. பம்ப்செட் உற்பத்தித் துறையின் முடக்கத்துக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முக்கியக் காரணமாகும். 18 சதவீதம் கொள்முதல் வரி விதிக்கப்படும் நிலையில், விற்பனைக்கு 12 சதவீதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முரண்பட்ட ஜிஎஸ்டி, இத்துறையை பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது. எனவே, வரி விதிப்பை சீரமைக்க வேண்டியது அவசியம். அதிகபட்சமாக 5 சதவீத வரியை மட்டுமே விதிக்க வேண்டும்.

அண்மையில் தமிழக முதல்வர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயண்ம் மேற்கொண்டு, தொழில் முதலீடுகளை திரட்டி வந்துள்ளார். அதேசமயம், உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பல நாடுகளில் சீனாவின் மோட்டார் பம்ப்செட்களே ஆதிகம் செலுத்துகின்றன. ஆனால், கோவையில் தயாராகும் மோட்டார் பம்ப்செட்களை பல நாட்டவரும் விரும்புகின்றனர். எனவே, கோவை மோட்டார் பம்ப்செட்களை ஏற்றுமதி செய்ய, மத்திய, மாநில அரசுகள் வழிகாட்ட வேண்டும். இதற்காக அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். பொறியியல் பட்டதாரிகளும் தொழில்முனைவோராக மாற விருப்பம் காட்டுவார்கள்.
தற்போதைய நெருக்கடியால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தொழில் முடக்கத்தை தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரு நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகைகளை, சிறு, குறு நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x