இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆபாச பேச்சு: காவலர் பணியிடை நீக்கம்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆபாச பேச்சு: காவலர் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

கோவை

கோவை அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை, துரத்திச் சென்று ஆபாசமாக பேசிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், கீரணத்தத்தில் உள்ள தன் தாயாரை பார்க்க, நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றார். அத்திப்பாளையம் அடுத்துள்ள சாலையில் அந்த பெண் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே இருசக்கர வாகனத்தில் சீருடை அணிந்த காவலர் ஒருவர், அந்த பெண்ணை பின் தொடர்ந்தார். இதை பார்த்த அந்த பெண், வேகமாக சென்றார்.

அவரை துரத்திச் சென்ற அந்த காவலர், ஓர் இடத்தில் அந்த பெண்ணை வழிமறித்து,‘ நீ அழகாக உள்ளாய். உன் கண்கள் அழகாக உள்ளது, எனக்கூறி விட்டு ஆபாசமாக பேசியுள் ளார். அச்சமடைந்த அந்த பெண், அருகில் இருந்த பேன்சி கடைக்குள் தஞ்சம் புகுந்தார். அந்த காவலர், அங்கு சென்றும் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண், செல்போன் மூலம் தன் கணவருக்கு தெரிவித்தார். அவர், நண்பர்களுடன் சம்பவ இடத்து வந்து காவலரை எச்சரித்தார்.

அப்போது தான் காவலர் மது போதையில் இருப்பதும், அவரது பெயர் பிரபாகரன் என்பதும், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரின் வாகன ஓட்டுநராக உள்ளதும் தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் பொதுமக்கள்,‘‘சீருடையில் இருப்பதால், அடிக்காமல் விடுகிறோம்,’’ என எச்சரித்து அந்த காவலரை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் காவல் துறை யினர் விசாரிக்கின்றனர்.

இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், தனக்கு கீழ் உள்ள அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும் போது,‘‘ இந்த சம்பவம் தொடர்பாக, முதல் கட்ட விசாரணைக்கு பின்னர், சம்பந்தப்பட்ட காவலர் பிரபா கரன் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர் பாக வழக்கு இதுவரை பதியப் படவில்லை,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in