

தருமபுரி
புதுச்சேரியைச் சேர்ந்த மனோ(58). இவரது மனைவி அஞ்சலாட்சி (51), மகள் மோசிகா (27) ஆகியோர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பணி நிமித்தமாக வசித்து வந்தனர். சமீபத் தில் புதுச்சேரி வந்த இவர்கள், ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்தனர்.
ஒகேனக்கலில் தற்போது பரிசல் பயணத்துக்கு மாவட்ட நிர்வா கம் தடை விதித்துள்ள நிலையில், ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியைச் சேர்ந்த மனோகரன்(37), இவர்களை தடையை மீறி பரிசலில் அழைத்துச் செல்ல முன்வந்தார்.
பிலிகுண்டுலு அருகே முயல் மடுவு பகுதியில் இருந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகில் உள்ள ஆலம்பாடி வரை பரிசலில் செல்ல ரூ.3,000 கட்டணம் பேசப் பட்டுள்ளது.
மனோ, அவரது மனைவி, மகள் மற்றும் கார் ஓட்டுநர் கந்தன் ஆகிய 4 பேரும் பரிசலில் பயணம் செய்துள்ளனர். முயல் மடுவு பகுதியில் கிளம்பிய பரிசல் சுமார் 5 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள ஆலம்பாடி பகுதியை நோக்கிச் சென்றபோது, நீலகிரி பிளேட் பகுதியில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் அனைவரும் ஆற்றில் விழுந்தனர். மனோ, மோசிகா, கந்தன் ஆகியோர் மரக்கிளைகளை பற்றிக் கொண்ட நிலையில், அவர் களை மனோகரன் காப்பாற்றியுள் ளார். ஆனால், அஞ்சலாட்சி நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
ஒகேனக்கல் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அஞ்சலாட்சியை தேடும் பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக பரிசல் ஓட்டுநர் மனோகரனிடம் போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.