Published : 12 Sep 2019 07:36 AM
Last Updated : 12 Sep 2019 07:36 AM

சென்னை ஐசிஎப்-ல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ‘ரயில் 18’ அதிவிரைவு ரயில்கள் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்: அடுத்த 2 நிதியாண்டுகளில் 40 ரயில்கள் தயாரிக்க ரயில்வே திட்டம்

சென்னை

‘ரயில் 18’ அதிவிரைவு ரயில்கள் தயாரிப்பு இந்த நிதி ஆண்டில் நிறுத்தப்படுவதாகவும், அடுத்த 2 நிதி ஆண்டுகளில் 40 ரயில்கள் தயாரிக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் சி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐசிஎப்-ல் முதல் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ரூ.97 கோடியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘ரயில் 18’ விரைவு ரயில், மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இன்ஜின் தனியாக இல்லாமல், பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். இந்த அதிவேக ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டு புதுடெல்லி - வாரணாசி இடையே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த ரயில் சேவையில் இதுவரை எவ்வித தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படவில்லை. இத னால், இதே மாதிரியான ரயில்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய ரயில்வே துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிதி ஆண்டில் ‘ரயில் 18’ பிரிவுகளில் 10 ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்தது. இதற்கிடையே, இந்த வகை ரயில் தயாரிப்பு வடிவமைப்புகளில் ஏற் கெனவே உள்ள விதிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை எனவும், மேலும், 3-வது ரயிலுக்கான டெண்டரின்போது சில நிறுவனங் களுக்கு சலுகை காட்டியிருப்ப தாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து ரயில்வே வாரியம் விசாரித்து வருகிறது. இதனால் ரயில் தயாரிப்பு பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி கள் சிலர் கூறும்போது, ‘‘ரயில் 18 வகை பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை. இந்த வகை ரயில்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒப்பந்தம் கிடைக்காத விரக்தியில் சில நிறுவனங்கள் திட்டமிட்டு, இதுபோன்ற புகார் களை எழுப்பி வருகின்றன. எனவே, விசாரணை நிறைவடைந்த பிறகு உண்மை தெரியவரும்’’ என்றனர்.

இதற்கிடையே, ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை ஐசிஎப்-ல் 2-வதாக தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ (ரயில் 18) விரைவு ரயில் புதுடெல்லி - காட்ரா இடையே இயக்கப்படவுள்ளது. இந்த வகை ரயிலை இயக்க அதிக மின்சாரம் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக ரயில்வே ஆராய்ச்சி நிறுவனம் முழுமையாக ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கு உரிய தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கிறோம். எனவே, இந்த நிதி ஆண்டில் ‘ரயில் 18’ அதிவிரைவு ரயில்கள் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் 2020-21 நிதி ஆண்டில் 15 ரயில்களும், 2021-22 நிதி ஆண்டில் 25 ரயில்களும் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x