

சி.பிரதாப்
சென்னை
மத்திய அரசின் உயர் சிறப்பு கல்வி நிறுவனத் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், நிதி பங்கீடு குறித்து தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மனிதவளத் துறை அமைச்சகம் 2017-ல் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி, தலா 10 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1,000 கோடி நிதியுதவியும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்படும். அதன்படி, சென்னை ஐஐடி, வேலூர் விஐடி உட்பட தலா 8 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங் களுக்கும் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள் ளது.
இதுதவிர மாநில உயர் கல்வி நிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகமும் மேற்கு வங்கத் தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும், மாநில அரசின் நிதி பங்கீடு இழு பறியால் சிறப்பு அந்தஸ்து கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.
இதுகுறித்து அண்ணா பல் கலைக்கழக பேராசிரியர்கள் கூறியதாவது:
சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்வி முறை மற்றும் நிர்வாகம் முழுவதும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவையாக இருக்கும். நிதியில் தன்னிறைவு உடையதாக இருக் கும். பாடத்திட்டங்களை யுசிஜி வழிகாட்டுதலின்றி தன்னிச்சையாக நிர்ணயிக்கலாம். கல்விக் கட்டண நிர்ணயம், ஆராய்ச்சி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தம், முதலீடு ஆகியவை மூலம் பேராசிரியர்களின் ஊதியம், ஆராய்ச்சிக்கான நிதி ஆதாரத்தை சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறு வனங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 20:1 என்ற மாணவர், பேராசிரியர் விகிதம் பின்பற்றப் படும். பல்வேறு சலுகைகள் கிடைக் கும்.
சிறப்பு அந்தஸ்து பெறும் மத்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு நிதியை மத்திய அரசே வழங் கும். மாநில உயர்கல்வி நிறுவனங் களுக்கு 75:25 விகிதத்தில் நிதியை மத்திய, மாநில அரசுகள் பங்கிட வேண்டும். அதாவது ஆயிரம் கோடி ரூபாயில் மாநில அரசு ரூ.250 கோடி நிதியை அளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் திட்டத்தை அமல் படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு கூறினர்.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறும்போது, ‘‘நாடு முழுவதுள்ள 800 மாநில அரசு பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 2 பல்கலைக்கழகங்கள் மட்டுமே உயர் சிறப்பு கல்வி நிறுவனம் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள் ளன. இந்த அந்தஸ்தை பெறுவ தால் சர்வதேச தரத்துக்கு உயர வழி வகுக்கும். எனவே, இந்த திட்டத் துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க முன்வர வேண்டும்’’ என்றார்.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தேவையான நிதியை அளிப்பது தொடர்பான மத்திய அரசின் கடிதம் பரிசீலனையில் உள் ளது. நிதித்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் நிதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும், அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற்று தனி நிறுவன மாகிவிட்டால், அதன்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளை நிர் வகிக்க தனி பல்கலைக்கழகம் அல் லது ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இதையெல்லாம் ஆலோ சித்த பிறகே இந்த விவகாரத்தை கையாள முடியும்’’ என்றனர்.