Published : 11 Sep 2019 08:56 PM
Last Updated : 11 Sep 2019 08:56 PM

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு 6-ம் வகுப்பு மாணவியின் உணர்ச்சிப்பூர்வ கடிதம்; விக்ரம் லேண்டர் செயல்படும் என ஆறுதல்: ட்விட்டரில் வைரல்

தேவகோட்டை,

கடின உழைப்பு, தன்னம்பிக்கை இரண்டும் இருப்பதனால் விக்ரம் லேண்டர் நிச்சயம் இயங்கும் நம்பிக்கை இழக்காதீர்கள் என 6-ம் வகுப்பு மாணவி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் சிற்பிகள் என்பதில் முன்னாள் இஸ்ரோ தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட கலாம் நம்பினார். இந்தியாவின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பள்ளிக்குழந்தைகள், இளம் தலைமுறையினர் அறிந்துக் கொள்ளவேண்டும் என ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்கின்றனர்.

பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விண்வெளி விஞ்ஞானத்தை இஸ்ரோ ஊக்குவிக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் விண்வெளி சாதனையின் ஒரு மைல்கல்லாக கருதப்பட்ட சந்திராயன் - 2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் நிகழ்வு பின்னடைவானது. விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்து காணாமல் போனதும் அனைவரையும் சோர்வடைய வைத்தது.

இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் சிந்தியதும் பிரதமர் அவரை தேற்றியதும் வைரலானது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு 6-ம் வகுப்பு பயிலும் 11 வயது சிறுமி கைப்பட உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதி உள்ளது சமூக வலைதளங்களில், பாராட்டுகளை பெற்று வருகிறது.

லேண்டரின் நிலை குறித்தும், தகவல் தொடர்பை மீண்டும் செயல்படுத்தவும், இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், கடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், அவர்கள் முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில், இளம் தலைமுறையினர் உங்கள் பக்கம் என்று நம்பிக்கையூட்டும் வகையில், கடிதம் எழுதியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் நதியா என்ற அந்த 11 வயது சிறுமி , இஸ்ரோ தலைவர் சிவனுக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில், “ ‘தன்னம்பிக்கையே வெற்றித்தரும்’ மதிப்பிற்குரிய சிவன் அய்யா அவர்களுக்கு வணக்கம், சந்திரயான் -2 விண்கலம் நிலவில் தரையிறங்குவது பெரும் சாதனைதான். சந்திரயான் -2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது, விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் என செய்தி மூலம் சில நாட்களுக்கு முன் தெரிந்துக்கொண்டேன்.

பின்பு செப்.7-ம் தேதி, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என தெரிந்துக்கொண்டேன். விகரம் லேண்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பை இழந்து விட்டது என்று அறிந்த பின் நான் வருத்தம் அடைந்தேன்.ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிந்தததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

அதனுடன் தொடர்புக்கொள்ள ஆர்ப்பிட்டரின் சுற்றுவட்டப்பாதையை மேலும் சிறிது குறைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்று தெரிந்துக்கொண்டேன். பணிகள் நன்றாக முடிந்து மேலும் புதிய தகவல்களை சந்திரயான் -2 பெற்று தரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் நம்பிக்கையை நீங்கள் கை விடாதீர்கள். இஸ்ரோவின் இடைவிடாத முயற்சியும், கடின உழைப்பும்,எங்களை போன்றோரின் பிரார்த்தனையும் விக்ரம் லேண்டரை செயல்படவைக்கும் என்ற நம்பிக்கை 100% உறுதியானது.

விக்ரம் லேண்டருக்கு எந்தவித சேதமும் இல்லாமல் இருப்பது உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களின் நம்பிக்கையால்தான்.முயற்சி திருவினையாக்கும்.கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம். பி.நதியா, ஆறாம் வகுப்பு, சேர்மன் வாசகம் நடுநிலைப்பள்ளி,தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவி இஸ்ரோ தலைவருக்கு எழுதிய கடிதத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் , 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அது தற்போது வைரலாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x