Last Updated : 11 Sep, 2019 05:33 PM

 

Published : 11 Sep 2019 05:33 PM
Last Updated : 11 Sep 2019 05:33 PM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு

சபரிமலை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. தந்திரி வாசுதேவன்நம்பூதிரி இதற்கான வழிபாடுகளை நடத்தி துவக்கி வைத்தார்.

மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வோர் ஆண்டும் மக்களை காணவருவதாக ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவர். இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் 10நாட்கள் வெகுசிறப்பாக நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதற்கான வழிபாடுகள் நடைபெற்றது. இதற்காக கடந்த 9ம் தேதி நடைதிறக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் நெய் அபிஷேகம், படிபூஜை, தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஓணம் பண்டிகையில் ஓணம் சத்யா எனும் விருந்து சிறப்புடையது. ஐயப்பன் கோயிலில் இன்று இந்த விருந்து அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதற்காக மஞ்சள்மாதா கோயில் மற்றும் பிரசாதம் தயாரிப்பு மடம் அருகிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் தந்திரி வாசுதேவன் நம்பூதிரி ஓணம் சத்யா வழிபாடுகளை மேற்கொண்டார். இதற்காக ஐயப்பனுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

புட்டுக்கிழங்கு, தோரன், பயறு, எரிசேரி, பரங்கிக்காய் குழம்பு, அப்பளம் ஆகியவற்றுடன் ஏராளமான காய்கறி, பயறு, அவியல் வகைகள், செரிமானத்தை ஏற்படுத்தும் இஞ்சிப்புளியுடன் பரிமாறப்பட்டன.

சிறப்பு உணவுகள் கருத்துஎடத்துமலை மோகனன் நம்பூதரி தலைமையில் பாலக்காடு முறைப்படி தயாரிக்கப்பட்டது.

அன்னதான நிகழ்ச்சியில் செயல் அலுவலர் பிரசாத், நிர்வாக அதிகாரி நீடுமர், சிறப்பு ஆணையாளர் மனோஜ், தந்திரி உதவியாளர் மனுநம்பூதரி, கீழ்சாந்தி சுதிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இந்த விருந்து நாளைவரை பக்தர்களுக்கு வழங்கப்படும்.

தேவஸம் ஊழியர்கள் அத்தப்பூ கோலமிட்டனர்.

பின்பு கோயில்வளாகத்தில் ஐயப்பனுக்கு குடைபிடித்து தூக்கிச் சென்றபடி வழிபாடுகள் நடத்தப்பட்டது.. இதற்காக தீபம் ஏந்திய ஊழியர்கள் செல்ல தொடர்ந்து நம்பூதிரி உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

நாளை ஓணம் பண்டிகைக்கான வழிபாடுகள் நிறைவு பெறுகிறது. எனவே நாளை மாலை 5.30மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x