Published : 11 Sep 2019 05:24 PM
Last Updated : 11 Sep 2019 05:24 PM
சென்னை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜால வித்தையைக் கைவிட்டு அறுவை சிகிச்சை செய்து பொருளாதாரத்தைச் சீர்படுத்த முயல வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (செப்.11) வெளியிட்ட அறிக்கையில், "நூறு நாள் சாதனைகளை விளக்கிக் கூறுவதற்காகவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வருகை புரிந்து பத்திரிகையாளர்களிடம் பல்வேறு கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமான பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை எவருமே மறுக்க முடியாது.
கடந்த ஜூலை 2018 இல் 8 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜூலை 2019 இல் 5 சதவீதமாக கடுமையாக சரிந்துள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய நிர்மலா சீதாராமன் இத்தகைய ஏற்றம் - இறக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்று பொறுப்பில்லாமல் ஒரு நிதியமைச்சர் கூறுவது மிகுந்த வேதனையைத் தருகிறது.
உலக வங்கியின் மதிப்பீட்டின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் தான்.
இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் ரூபாயாக உயர்த்தப் போவதாக நரேந்திர மோடி நம்பிக்கையோடு மதிப்பீடு செய்திருந்தார். ஆனால், இந்த நிலையை இந்தியா எட்டுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது 12 சதவீதமாக இருக்க வேண்டும். 5 சதவீதத்திற்கும் கீழே சென்று கொண்டிருக்கிற இந்தியப் பொருளாதாரத்தை 12 சதவீதமாக ஆக்குவதற்கு நரேந்திர மோடி என்ன மந்திரம் வைத்திருக்கிறார் ?
நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக நுகர்வு தேவைப்படுவதாக குறிப்பிட்ட நிதியமைச்சர், அரசு செலவுகளை அதிகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும் என்கிறார். ஆனால், தனிநபர் நுகர்வு 18 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஆனால், மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவு 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது மக்களிடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
நிர்மலா சீதாராமன்: கோப்புப்படம்
ஆனால், கட்டுமானத் தொழில் 9.6 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 29, 2019 நிலவரத்தின்படி கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது. இது 2014-15 இல் ரூபாய் 3 ஆயிரத்து 343 கோடியாகத் தான் இருந்தது. இந்தக் கடன் சுமை ஏறிய பிறகு நெடுஞ்சாலைத்துறை மூலமாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியுமா ? ஆண்டுதோறும் ரூபாய் 14 ஆயிரம் கோடி கடன் கட்டுகிற நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் வளர்ச்சி ஏற்படுத்துவது சாத்தியமா ?
வாகன உற்பத்தி குறைந்ததற்குக் காரணம் பணம் வைத்திருப்பவர்கள் புதிதாக கார் வாங்க விரும்பாமல் மெட்ரோ ரயில் மற்றும் ஓலா, உபர் போன்ற தனியார் நிறுவன வாடகை கார்களை அதிகமாக[ பயன்படுத்துவதே இந்த சரிவுக்குக் காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதைவிட ஒரு அப்பட்டமான திசை திருப்புகிற முயற்சி வேறு எதுவும் இருக்க முடியாது. பொருளாதார மந்தநிலை காரணமாக மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்ததனால் தான் வாகன விற்பனை குறைந்தது என்பதை பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
கடந்த ஜனவரியில் மொத்த வாகன விற்பனை 1 லட்சத்து 89 ஆயிரத்து 87. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 467 ஆக இது குறைந்திருக்கிறது. இது 23 சதவீத வீழ்ச்சியாகும். இதனால் 2 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். அதேபோல, ரியல் எஸ்டேட் துறையில் 30 நகரங்களில் எடுத்த கணக்கீட்டின்படி மார்ச் 2018 இல் விற்கப்படாத குடியிருப்புகள் 10 லட்சத்து 20 ஆயிரம். அது, மார்ச் 2019 இல் 12 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.
முத்ரா திட்டத்தின் கீழாக அதிக அளவில் பெண்கள் பலன் அடைந்ததாக நிதியமைச்சர் கூறுகிறார். நாடு முழுவதும் முத்ரா கடன் 12 கோடி பேருக்கு ரூபாய் 6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் கடன் வழங்கப்பட்ட சராசரித் தொகை ரூபாய் 45 ஆயிரத்து 34. ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றவர்கள் 1.3 சதவீதம். இந்தக் கடன் வழங்கப்பட்டதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் பெருகியதாக எந்தக் குறிப்பும் இல்லை. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகாது என்பதை நிதியமைச்சரால் மறுக்க முடியுமா ? அதுமட்டுமல்லாமல், முத்ரா கடன் பெற்றவர்களில் வாராக் கடன் ரூபாய் 7 ஆயிரத்து 277 கோடி. இந்தப் பின்னணியில் முத்ரா திட்டத்தை சாதனை என்று கூறுவதற்கு நிதியமைச்சருக்கு அபாரத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும்.
எனவே, இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட வேண்டும். காயத்துக்கு புனுகு தடவுகிற ஜால வித்தையைக் கைவிட்டு அறுவை சிகிச்சை செய்து பொருளாதாரத்தைச் சீர்படுத்த முயல வேண்டும்," என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.