Published : 11 Sep 2019 04:02 PM
Last Updated : 11 Sep 2019 04:02 PM

பொருளாதார வீழ்ச்சியே மத்திய அரசின் நூறு நாள் சாதனையாக உள்ளது: சீமான்

நத்தம்

பொருளாதார வீழ்ச்சியே மத்திய அரசின் நூறு நாள் சாதனையாக உள்ளது, என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "முதலாளிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்ததுதான் பொருளாதா வீழ்ச்சிக்கு காரணம். விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத நாடு முன்னேறாது. விவசாயி வாழ்கிறான் என்றால் அந்த நாடு வளர்கிறது என்று அர்த்தம். விவசாயத்தை கைவிட்டு தொழில்வளர்ச்சி பற்றி பேசுவது பேராபத்தில்தான் முடிவடையும்.

பொருளாதாரா வீழ்ச்சி தான் மத்திய அரசின் நூறுநாள் சாதனையாக உள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வரியால் மக்களின் வாங்கும் திறனை குறைத்துவிட்டார்கள்.

மின்னணுபரிவர்த்தனையால் கிராமமக்களால் ஒன்றும் பயனில்லை. மத்திய அரசு முதலாளிகளின் தரகர்களாக உள்ளது" என மத்திய அரசை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசும்போது, "கல்வி சுகமாக இருக்கவேண்டும். சுமையாக இருக்ககூடாது. மதிப்பெண்களை வைத்து மனித அறிவை கணக்கிடக்கூடாது. இங்கு கல்வி முறையே தவறாக உள்ளது. கல்வியை தீர்மானிக்கிற அமைச்சர்களுக்கு எந்த தகுதித் தேர்வும் இல்லையே.

தமிழக அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் திமுக, அவர்களது ஆட்சிக்காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் வந்தால் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. அது ஒழுங்காக இல்லை.

மரக்கன்று நடுவதை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும். அதற்கு நிதி ஒதுக்குகிறேன் என தங்களுக்கு ஒதுக்கிக்கொள்கின்றனர்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x