

சென்னை சென்ட்ரல் அருகே ஓடும் ரயிலில் கடற்படை அதிகாரியைத் தாக்கி பணம், லேப்டாப் கொள்ளையடித்துச் சென்ற 5 இளைஞர்களை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து கடந்த 12-ம் தேதி சென்னைக்கு ஹவுரா விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. பேசின்பிரிட்ஜ் அருகே இருட்டில் மறைந்திருந்த முகமூடிக் கொள்ளையர்கள் திடீ ரென ரயில் பெட்டியில் ஏறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஹசிலி (24) என்பவரைத் தாக்கினர். அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம், லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். இது பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த புகாரின் பேரில், ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக் டர் முருகன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் அவர்கள், கொருக்குப்பேட்டை இடுகாட்டில் மறைந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினர் அங்கு சென்று 5 பேரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சண்முகம் (19), வினோத் குமார் (19), இமானுவேல் பீட்டர் (19), அஜீத் (19), அஜீத் (எ) இட்டார்ஜித் (19) என தெரிந்தது.
அவர்களிடம் இருந்து செல் போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடி பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறை யில் அடைக்கப்பட்டனர்.