

மதுரை
முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தால், முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இதனால் சுமார் ரூ.8,300 கோடி அளவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இது முதல்கட்டத் தொகைதான். இது இன்னும் அதிகமாகும் என்று நம்புகிறேன். முதல்வரின் சுற்றுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும். அப்போதுதான் பல்வேறு நன்மைகள் கண்ணுக்குத் தெரியும்.
சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்கும் சாதனைகளையே ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியாது. கடல் கடந்து முதல்வர் செய்த சாதனையை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வார்?
தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஓர் எளிமையான முதல்வராக எங்களோடு கலந்துரையாடி கருத்துகளைக் கேட்டு, அதை முதலீட்டாளர்களிடம் சொல்லி, நம்பிக்கையை ஏற்படுத்தியவர். சுதந்திர இந்தியாவில், தமிழக அரசியல் வரலாற்றில் இதைச் செய்து சரித்திரம் படைத்த முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வரின் இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணம் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய தருணம்" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.