Published : 11 Sep 2019 12:58 PM
Last Updated : 11 Sep 2019 12:58 PM

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அகம்பாவத்தில் பேசுகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம் 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அகம்பாவத்தில் பேசுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி நேற்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்பினார். சுற்றுப் பயணம் மூலம் ரூ.8,830 கோடிக்கான முதலீடுகளுக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் 37,300 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதற்கிடையே முதல்வருடன் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்ட பலர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதை ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி மதுரை மற்றும் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முதல்வரும் அமைச்சர்களும் உலகத்தைச் சுற்றியது தமிழக மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

இந்தப் பயணத்தில் ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் சொல்கின்றனர். அவை முதலில் வரட்டும். வந்தபிறகு அவை குறித்துப் பேசலாம். இல்லையென்றால் எதிர்க்கட்சிகள் பொறாமையில் பேசுவதாகக் கூறுகின்றனர். வெள்ளை மனதுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் வெள்ளை மனதுடன்தான் வெள்ளை அறிக்கை கேட்கிறோம். மக்கள் எல்லாவற்றையும் முழுமையாக அறியவேண்டும். அகம்பாவத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகிறார்.

துரித உணவு போல துரித பதவி சுகம் தேடுபவர்கள்தான் அமமுகவை விட்டு விலகிச் சென்றுள்ளனர்'' என்றார் டிடிவி தினகரன்.

முன்னதாக விருதுநகரில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "டிடிவி தினகரனுக்கு இனி அரசியல் வாழ்க்கை கிடையாது. அவர் கூடாரம் காலியாகி விரைவில் திமுகவில் சேர்ந்துவிடுவார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x