செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 12:55 pm

Updated : : 11 Sep 2019 12:55 pm

 

முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் பாராட்டுக் கூட்டம் நடத்துவார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

minister-jayakumar-slams-mk-stalin
அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

முதல்வர் பழனிசாமிக்கு, ஸ்டாலின் பாராட்டுக் கூட்டம் நடத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (செப்.11) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"முதல்வருக்கு ஸ்டாலின் எப்போது பாராட்டுக் கூட்டம் நடத்தப் போகிறார்? எங்களை எப்போது அழைப்பார்? திமுக தலைவர் ஸ்டாலின் தான் சொன்னதைச் செய்வாரா? செய்வார் என்றுதான் நான் நம்புகிறேன். பாராட்டுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தால், அது உண்மையிலேயே ஆரோக்கியமான அரசியல். அப்போது, தமிழகத்தில் இப்படியொரு அரசியலா என உலகமே வியந்து பார்க்கும். அப்படிச் செய்தால், திமுகவின் மதிப்பும் கூடும். எங்களின் மதிப்பும் கூடும். சொன்னபடி செய்வதுதான் நல்லது.

முதலீடுகளை ஈர்க்க முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அதன்மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்தன என்பதையும் முதல்வர் விளக்கியிருக்கிறார்.

ஆனால், 1996-ல் திமுக தலைவராக இருந்த கருணாநிதி சிங்கப்பூர் சென்றார். எதற்காகச் சென்றார்? தனிப்பட்ட விஷயங்களுக்காகச் சென்றார். அப்படியா நாங்கள் சென்றோம்? யாரையும் குற்றம் சொல்லக்கூடாது. மறைந்த தலைவர் பற்றி பேசக்கூடாது. ஆனால், ஸ்டாலின் இப்படிப் பேசினால், வரலாறைச் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

ஸ்டாலின் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார். இதில் எவையெல்லாம் அலுவல் ரீதியாகச் சென்றவை? எவ்வளவு முதலீடுகள் கொண்டு வந்தோம் என ஸ்டாலின் எங்களுக்கு அறிக்கை கொடுக்கட்டும். அதை முதலில் செய்யட்டும். ஆனால், அவர்களால் அதனைக் கொடுக்க முடியாது.

கூவத்தைச் சுத்தப்படுத்துகிறோம் என, துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த மா.சுப்பிரமணியனுடன் வெளிநாடு சென்றார். ஆனால், கூவம் சுத்தமாகிவிட்டதா? வெளிநாட்டுக்குச் செல்ல எவ்வளவு செலவானது? ஆனால், கூவத்தை இந்த அரசு தான் முழுமையாக சுத்தப்படுத்துகிறது.

தன் மீது குற்றத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர் மீது ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார். வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்ததற்கு, எதிர்க்கட்சி திறந்த மனதுடன் பாராட்ட வேண்டும். நல்ல எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின், பாராட்டுக் கூட்டம் நடத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்திற்கு நிறைய அந்நிய முதலீடுகள் வந்திருக்கின்றன. ஆனால், திமுக அட்சியில் எவ்வளவு முதலீடுகள் வந்தன என, விவாதம் நடத்தத் தயாரா? 2001-2006 இல், தொழில்நுட்பத் துறை அமைச்சராக, என் தலைமையில் வெளிநாடுகளுக்குச் சென்று சிறந்த நிறுவனங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தோம்.

ஹூண்டாய், ஃபோர்டு போன்றவை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. அதன்பிறகு, திமுக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. ஆனால், விதை அதிமுக போட்டது. எவ்வளவு முதலீடுகள் கொண்டு வந்தோம் என்பதை எங்களால் சொல்ல முடியும். ரூ.40,000 கோடி முதலீடு கொண்டு வந்ததாக ஸ்டாலின் சொல்வதை விளக்க வேண்டும்''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகதிமுகமு.க.ஸ்டாலின்முதல்வர் எடப்பாடி பழனிசாமிMinister jayakumarAIADMKDMKMK stalinCM edappadi palanisamy
Popular Articles

You May Like

More From This Category

More From this Author