Published : 11 Sep 2019 12:06 PM
Last Updated : 11 Sep 2019 12:06 PM

அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்க: வைகோ

சென்னை,

அண்ணா பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (செப்.11) வெளியிட்ட அறிக்கையில், "சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல; சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. சூழ்நிலைகளால் நிகழ்ந்த குற்றங்களுக்காக, நீதிமன்றத் தீர்ப்பால் தண்டனை பெற்றுச் சிறையில் அடைக்கப்படும் கைதிகள், வேதனைப்பட்டு மனம் வருந்தி, பக்குவப்பட்டு, விடுதலை பெற்ற பின் நெறியோடு வாழத் துடிக்கின்றனர்.

வாழ்நாள் சிறைத்தண்டனை மற்றும் பத்து ஆண்டுகள் வரை தண்டிக்கப்பட்டவர்கள், சில குற்றப்பிரிவுகளில் தண்டனை பெற்ற காரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றனர். 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கின்றனர். அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகி, மரணத்தைவிடக் கொடுமையான மனத் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கெனவே நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை, மேலும் தண்டிப்பதைப் போல இந்த நடவடிக்கைகள் அமைகின்றன. இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், 14 ஆண்டுகளுக்கு மேல் கைதிகளின் சிறைவாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் எண்பதுகளில் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திருத்தத்தில், எதிர்த்துக் கருத்து சொன்னது நான் மட்டுமே.

குற்றப்பிரிவுகளைக் காட்டி விடுவிக்கப்படாத சிறைவாசிகளை, பொது மன்னிப்பில் விடுவிக்க அரசு முன்வர வேண்டும். சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குத் திருமணம், உடல்நலம் பாதிப்பு, இறப்பு என்றால், மனிதாபிமான அடிப்படையில் பரோல் விடுப்பு தரப்படுகின்றது. அப்படி விடுப்பில் செல்லும் சிறைவாசிகள், தவிர்க்க இயலாத காரணங்களால் ஓரிரு நாட்கள் தாமதமாக சிறைக்குத் திரும்பினால்கூட, இந்தியத் தண்டனைச் சட்டம் 224 பிரிவின் கீழ் தண்டனைக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு விடுகின்றது. அவர்கள், பொது மன்னிப்பில் விடுவிக்கப்படுவதும் கிடையாது.

வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒரு சிறைவாசி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால், பரோல் விடுப்பு கிடையாது என்பதும், நியாயப்படுத்த முடியாத மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை ஆகும். மேல் முறையீடு ஆண்டுக் கணக்கில் நீடித்துக் கொண்டே போகும். சிறைச்சாலையின் உள்ளே திருந்தியவர்களாக ஏராளமானோர் பொது மன்னிப்பு பெற முடியாமலும், பரோலில் செல்ல முடியாமலும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

எனவே, இந்தக் குறைபாடுகளைப் போக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களையும், பரோல் விடுப்பில் சென்று ஒருநாள் இருநாள் தாமதமாகத் திரும்பியதைக் காரணம் காட்டி அவர்கள் விடுதலை பெற முடியாத இன்னலுக்கு ஆளாக்கும் நடைமுறையை மாற்றி, அவர்களையும் மனிதாபிமானத்தோடு தமிழக அரசு விடுதலை செய்து, அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்க வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x