Published : 11 Sep 2019 10:57 AM
Last Updated : 11 Sep 2019 10:57 AM

தூர்வாருதல் மற்றும் மராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக: முத்தரசன்

சென்னை

தூர்வாருதல் மற்றும் மராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (செப்.11) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த எட்டு ஆண்டு காலமாக தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை.
ஒருபோக சம்பா சாகுபடியும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதற்கு இயற்கை சீற்றங்கள் மட்டுமல்ல, செயற்கை இடர்ப்பாடுகளும் காரணமாகும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ல் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டு ஒருமாத காலமாகி விட்டது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றது. அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டும் இதுவரை கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லவில்லை. சாகுபடிப் பணிகள் தொடங்கவில்லை. பாசன வடிகால்கள் தூர்வாரும் பணிகள் மற்றும் மராமத்துப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

இப்பணிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, சுயநல ஆதாயம் தேடும் நோக்கத்துடன் காலதாமதமாகத் தொடங்கி, ஒதுக்கப்படும் நிதியை பங்கிட்டுக்கொள்ள வழிவகை காணப்படுகின்றது. இதன் விளைவாக கடைமடைப் பகுதி வரை தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். மறுபக்கம் எவ்விதப் பயன்பாடும் இன்றி தண்ணீர் கடலுக்குச் செல்கின்ற கொடுமை நடந்து வருகின்றது.

சென்ற ஆண்டு மட்டும் 227 டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலுக்குச் சென்று வீணானது என தெரிவிக்கப்படுகிறது. காவிரி, வெண்ணாற்றில், கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் மட்டுமே மழைக்கால உபரி தண்ணீர் வீணாகாமல் சேமிக்க முடியும் என்பதை அறிந்திருந்தும் அதிமுக அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் நடப்பாண்டிலும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28-ல் மூடப்படுவது வழக்கமாகும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி முதல் மே வரையிலான காலங்களில் தூர்வாருதல் மற்றும் மராமத்துப் பணிகளை முழுமையாகச் செய்து முடிக்க முடியும். அவ்வாறு செய்யாமல் வேண்டுமென்றே ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி பணிகளை அரைகுறையாகச் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற முறைகேடாகும்.

இவ்வாண்டு மேற்கொண்ட பணிகள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து, தமிழக அரசு பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதுடன், தண்ணீர் சேமிப்பு தடுப்பணைகள் கட்டுவதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்", என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x