

கடலூர்
சக மாணவரால் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு, சிதம்பரம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவியை மாதர் சங்கத்தினர் பார்வையிட்டு, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் முத்தமிழன்(20). இவரும், மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை உடற்கல்வி இரண்டாமாண்டு பயின்று வருகின்றனர்.
இருவரும் கடந்த 5 வருடங்களாக பழகி வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அந்த மாணவி கடந்த சில நாட்களாக முத்தமிழனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரடைந்த முத்தமிழன், நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்து விடுதிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை வழி மறித்து, தான் எடுத்து வந்த ஆசிட்டை அவர் மீது வீசியுள்ளார். இந்த தாக்குதலால் அந்த மாணவி படுகாயமடைந்தார்.
அங்கிருந்த மாணவர்கள், பொதுமக்கள் உடனடியாக மாணவியை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாணவியின் மீது ஆசிட் வீசியதைக் கண்ட மாணவர் களும், பொது மக்களும் முத்தமிழனை பிடித்து சரமாரி யாக தாக்கினர். இதில் காயமடைந்த அவரும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.
அண்ணாமலை நகர் காவல் நிலையத்தினர், முத்தமிழன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிதம்பரம் நீதிமன்றம் எண் 1-ல் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜான்சிராணி, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, மாதர் சங்க நகர்குழு உறுப்பினர் அமுதா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து, இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகி குமரவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கச் செயலாளர் கோபால் உள்ளிட்டோர் மருத்துவ மனைக்குச் சென்று மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜான்சிராணி, "ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிக ஆபத்து இல்லையென்றாலும் வாய்பேச முடியாத நிலையில் தொண்டை மற்றும் கண் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை இந்த மருத்துவமனை நிர்வாகம் செய்ய வேண்டும். காவல்நிலையம் அருகில் இருந்தும் பல்கலைக்கழக வளாகத்தில் இதுபோன்ற செயல்கள் நடப்பது வருத்தம் அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் படங்கள் மற்றும் அவரது பெயரை முழு விலாசத்துடன் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதனால் அவர்களது பெற்றோர் மனஉளைச்சல் அடைகின்றனர். இது போன்று பாதிக்கப்பட்ட பெண்களின் படங்களையும் முழு அடையாளத்தையும் வெளியிடக் கூடாது என்று விதி உள்ளது. எனவே இது போன்ற செயலை நிறுத்தி கொள்ள வேண்டும்.
ஆசிட் வீசியவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கூறினார்.