Published : 11 Sep 2019 10:34 AM
Last Updated : 11 Sep 2019 10:34 AM

திருப்பூர் மாநகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்காக அகற்றப்படும்; நூற்றாண்டு மரங்களை மறுநடவு செய்ய தன்னார்வலர்கள் முடிவு

பெ.ஸ்ரீனிவாசன்

திருப்பூர்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் அகற்றப்படவுள்ள நூற்றாண்டு மரங்களில் சிலவற்றை மறுநடவு செய்ய, தன்னார்வலர்கள் முன் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் படுகிறது.

திருப்பூர் மாநகராட்சியை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்து, அதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் குடிநீர் அபி விருத்தி, புதிய குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், மாநாட்டு அரங்கம், பல அடுக்கு வாகனம் நிறுத்து மிடம், தினசரி மற்றும் வாரச்சந்தை மேம்படுத்துதல், பூ மற்றும் மீன் சந்தைகள் மேம்படுத்துதல், மேம் பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போதைய டவுன்ஹால் பகுதி யிலுள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, அடுக்குமாடியில் புதிய பொதுப் பயன்பாட்டு கட்டிடம், பழைய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள், அதனை யொட்டியுள்ள முத்துப்புதூர் பள்ளிக் கட்டிடத்தை அகற்றிவிட்டு அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இக்கட்டமைப்புகள் வரும் பகுதிகளிலுள்ள 10-க்கும் மேற்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டாமல், உரிய முறையில் பாதுகாப்பாக அகற்றி மறுநடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதுதொடர் பான செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்தன. இந்நிலையில், அகற்றப்படவுள்ள மரங்களில் சிலவற்றைஎடுத்து மறுநடவு செய்ய தன்னார்வலர்கள் முன்வந்துள்ள தாக, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் 3 அரச மரங்களை மறுநடவு செய்ய அனுமதி கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் வேம்பு உட்பட பிற நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களையும் மறுநடவு செய்ய தன்னார்வலர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அவகாசம் கிடைக்குமா?

மேலும் டவுன்ஹால் முகப்பு பகுதியில் மாநகராட்சிக்கு உரிய 8 கடைகள் உள்ளன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் அந்த கடைகளும் இடிக்கப்படவுள்ளன. தீபாவளி வரை கடைகளை இடிக்காமல் வியாபாரம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டுமென, கடை உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘தீபாவளி நெருங்கும் நேரத்தில் கடைகளை அதிக முதலீடு செய்து அழகுபடுத்தி வைத்துள்ளோம். நாங்கள் அரசின் திட்டத்துக்கு எதிரானவர்கள் இல்லை. தீபாவளி வரை அனுமதி அளித்தால் நஷ்டம் இல்லாமல் வெளியேறி விடுவோம்' என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கடந்த மாதம் 19-ம் தேதி 15 நாட்கள் அவகாசத்துடன் அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதற்கு மேல் வாய்ப்பில்லை' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x