

வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர்
காவிரி ஆற்றில் வரும் உபரி நீர் கொள்ளிடத்தில் திருப்பிவிடப்பட்டு, 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை யில், காவிரி டெல்டாவின் கடை மடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், கர்நாடக அரசு கடந்த மாதம் அதிகளவில் தண்ணீரை திறந்து விட்டது. இதனால் மேட்டூர் அணை யின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, டெல்டா பாசனத்துக்காக ஆக.13-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கல்லணையில் இருந்து ஆக.17-ம் தேதி காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால் வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் பகிர்ந்துவிடப்பட்டது.
அதேநேரத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள், சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்ததால் ஆறு, வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீரையே பொதுப் பணித் துறையினர் திறந்துவிட்டனர். இதனால், பல இடங்களில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.
இந்நிலையில், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணை யின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது.
இந்த தண்ணீர் கல்லணைக்கு வந்த நிலையில், அங்கிருந்து நேற்று காலை நிலவரப்படி காவிரியில் விநாடிக்கு 9,548 கனஅடியும், வெண்ணாற்றில் 9,022 கனஅடியும், கல்லணைக் கால்வாயில் 3,004 கனஅடியும், கொள்ளிடத்தில் 11,045 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படு கிறது.
வெண்ணாற்றில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறுவதால், அதில் திறக்கப்படும் தண்ணீர் திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களுக்கு இதுவரை செல்லவில்லை. இதேபோல, கல் லணைக் கால்வாய் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெறுவதால் சேது பாவாசத்திரம், பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் இதுவரை சென்று சேரவில்லை.
இதுகுறித்து தமிழக விவசாயி கள் சங்கத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேலஉளூர் ப.ஜெகதீசன் கூறிய தாவது: காவிரியில் தண்ணீர் கரை புரண்டு செல்கிறது. பாதுகாப்பு கருதி கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரில் பெரும்பகுதி கடலில் வீணாக கலக்கும் நிலை உள்ளது. ஆனால், வாய்க்கால்களில் போதிய தண்ணீர் வராததால் வயல்கள் வறண்டு கிடக்கின்றன. கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறையில் களப்பணியாளர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு நிரப்பி இருக்க வேண்டும்.
வீணானது 400 டிஎம்சி நீர்
கல்லணையில் இருந்து கொள்ளி டத்தில் எப்போதும் உபரி நீர்தான் திறக்கப்படும். கடந்தாண்டு சுமார் 400 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. அதே நேரத்தில் கடந்த கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
அதன்பிறகு பல இடங்களில் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப் பட்டுள்ளன. அதற்கு உடனடியாக தண்ணீரை பொதுப்பணித் துறை யினர் வாய்க்கால்கள் மூலம் வழங்கி நிரப்ப வேண்டும். தற்போது ஆறுகளில் தண்ணீர் அதிகளவில் வருவதை பயன்படுத்தி சேமித்து வைக்க நடவடிக்கை எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதுடன், சாகுபடியும் பாதிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
முக்கொம்பு, கல்லணை
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘முக்கொம்பு, கல்லணை யில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி அளவுக்கு செல்கிறது. இதில் ஆயிரம் கனஅடி நீர் நிலத்தில் உறிஞ்சப்பட்டுவிடும். மீதமுள்ள 17 ஆயிரம் கனஅடி நீர் நேற்று இரவு முதல் நாகை மாவட்டம் மகேந்திரபள்ளி என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது’’ என்றனர்.