Published : 11 Sep 2019 07:46 AM
Last Updated : 11 Sep 2019 07:46 AM

எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள 1000 ரயில்களில் ஜெனரேட்டர் பெட்டிகளை நீக்கிவிட்டு நேரடி மின்விநியோகம் செய்ய முடிவு- கூடுதலாக 70 ஆயிரம் படுக்கை வசதி கிடைக்கும்

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னை

எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப் படவுள்ள 1000 விரைவு ரயில்களில் ஜெனரேட்டர்களுக்கான பெட்டி களை நீக்கிவிட்டு நேரடியாக மின்விநியோகிக்கும் முறையை கொண்டுவர ரயில்வே திட்ட மிட்டுள்ளது. இதனால், கூடுதலாக 70 ஆயிரம் படுக்கை வசதிகள் கிடைக்கும் என ரயில்வே அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் (ஐசிஎப்) கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஜெர்மன் தொழில் நுட்பம் மூலம் வடிவமைக்கப் பட்டுள்ள எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில உதிரி பொருட்கள் ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 2016-ம் ஆண்டு முதல் சொந்த தொழில்நுட்பத்தில் எல்எச்பி பெட்டிகளை ஐசிஎப் தயாரித்து வருகிறது.

எல்எச்பி பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, மேலும் அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜிங் வசதி உட்பட பல்வேறு வசதி கள் உள்ளன. எல்எச்பி சாதாரண பெட்டிகளில் 80 படுக்கைகளும், ஏசி பெட்டியில் 72 படுக்கைகளும் உள்ளன.

இருப்பினும், எல்எச்பி பெட்டி களுக்கான மின்விநியோகம் செய்ய டீசல் ஜெனரேட்டர் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அதில் இருந்து மற்ற பெட்டிகளுக்கு மின்சாரம் எடுத்து செல்லப்படுகிறது. அந்த வகையில் 24 பெட்டிகள் கொண்ட ஒரு விரைவு ரயிலில் முன், பின் என 2 ஜெனரேட்டர் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், டீசல் செலவு அதிகமாகிறது. மேலும், ஜெனரேட்டர் சத்தமும் அதிகமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

பிரத்யேக மின்மாற்றிகள்

இந்நிலையில், இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். அதன்படி, புதியதாக வரும் எல்எச்பி பெட்டிகளுக்கு ரயில் இன்ஜினில் இருந்தே மின் சாரம் சேமித்து, நேரடியாக மின் விநியோகம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக, பிரத் யேக மின்மாற்றிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த புதிய திட் டத்தை சோதனை முயற்சியாக வடக்கு ரயில்வேயில் எல்எச்பி பெட்டிகள் கொண்ட 6 சதாப்தி ரயில் களிலும், 4 ராஜ்தானி ரயில்களிலும் இருந்த ஜெனரேட்டர் பெட்டிகள் நீக்கப்பட்டு, நேரடியாக மின் விநியோகம் செய்யப்பட்டு இயக்கப் படுகின்றன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

எல்எச்பி ரயில் பெட்டிகளில் ஏ.சி, மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் இயங்கவும், செல்போன் சார்ஜிங் உள்ளிட்டவைக்கான மின்சார விநியோகம் செய்ய ஒரு விரைவு ரயிலில் 2 ஜெனரேட்டர் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ஒரு ஜென ரேட்டர் 1 மணி நேரம் இயங்க குறைந் தது 35 முதல் 40 லிட்டர் டீசல் செலவாகிறது.

இதனால், எரிபொருள் செலவு அதிகரிப்பதோடு, ஒவ்வொரு விரைவு ரயிலிலும் தலா 2 பெட்டிகள் ஜெனரேட்டர்களுக் காக இணைக்க வேண்டியுள்ளது. இதற்கு, மாற்றுதீர்வு காணும் வகையில் எல்எச்பி பெட்டிகளுக் கும் ரயில் இன்ஜினில் சேமிக்கப் பட்டு, பெட்டிகளுக்கு நேரடியாக மின்சாரம் விநியோகம் செய்யும் முறை சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்தபட்சமாக விரைவு ரயிலில் ஒரு ஜெனரேட்டர் பெட்டியை நீக்கினாலே, இந்த பெட்டிக்கு மாற்றாக ஒரு முன்பதிவு பதிவு பெட்டி இணைக்கப்படும் பட்சத்தில் 72 படுக்கை வசதிகள் கூடுதலாக கிடைக்கும்.

வரும் 2020-21-ம் நிதி ஆண்டுக்குள் எல்எச்பி பெட்டிகளு டன் 1,000 விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், விரைவு ரயில் களில் கூடுதலாக 70 ஆயிரம் படுக்கை வசதிகள் கிடைக்கும். மேலும் ரூ.1,000 கோடி வரை எரிபொருள் சேமிப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐசிஎப் நடவடிக்கை

டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறிய தாவது:

எரிபொருள் சேமிப்பு மற்றும் பயணிகள் கூடுதலாக பயணம் செய்யும் வகையில் ரயில்வே மேற்கொண்டு வரும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. அனைத்து ரயில் பெட்டிகளும் இனி எல்எச்பி வகையில்தான் வரப்போகிறது என ரயில்வே வாரியம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. எனவே, இத்திட் டத்தை தீவிரமாக செயல்படுத்த வாரியம் முயற்சிக்க வேண்டும்.

2001-ம் ஆண்டு முதல் மார்ச் 2016 வரை 4,020 பெட்டிகள், 2016-17-ம் நிதி ஆண்டில் 1,470, 2017-18-ம் நிதி ஆண்டில் 2,373, 2018-19-ம் நிதி ஆண்டில் 3,025 என மொத்தம் 10,888 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், சுமார் 300 ஜெனரேட்டர் பெட்டிகளும் அடங்கும். நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டுக்கு 5,784 எல்எச்பி பெட்டிகள் தயாராகி வருகின்றன. இந்த எல்எச்பி பெட் டிகள் அனைத்தும் டீசல் ஜெனரேட் டர் பெட்டியில் இருந்து மின்சாரம் எடுத்து செல்லும் வகையில் தயா ரிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, தற்போது தயாரிக்கப் படும் பெட்டிகளிலும் ஜெனரேட்டர் களுக்கு பதில் இன்ஜினில் இருந்து நேரடியாக மின்விநியோகிக்கும் முறையை செயல்படுத்த ஐசிஎப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x