

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொதுமக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க திட்ட அறிக்கை 2007-08-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
இரண்டு தொகுப்புகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியது. முதல் தொகுப்பு வண்ணாரப்பேட்டையில் தொடங்கி விமான நிலையத்தில் முடிகிறது. இதன் மொத்த நீளம்: 23.085 கி.மீ. (இதில் 14.3 கி.மீ. தரைக்கடியில் செல்கிறது) இரண்டாவது தொகுப்பு சென்னை சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலையில் முடிகிறது. இதன் மொத்த நீளம்: 21.961 கி.மீ. (இதில் 9.7 கி.மீ. தரைக்கடியில் செல்கிறது).
சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு ரூ.70, எழும்பூரில் இருந்து விமான நிலையத்துக்கு ரூ.60, டிஎம்எஸ்ஸில் இருந்து விமான நிலையத்துக்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சொகுசாக, விரைவாகப் பயணம் செய்ய முடியும் என்பதால் மெட்ரோவில் பயணிக்க பெரும்பாலான பயணிகள் விரும்புகின்றனர். மெட்ரோ ரயில் சேவையில் பயணிகள், பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், '' மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கிய நாள் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் முதல் 19 நாட்களில் ஒரு லட்சம் பேர் வரை பயணம் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 29 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.