

புதுச்சேரி,
புதுவையில் இந்தியத் திரைப்பட விழா வரும் 13-ம் தேதி தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வாகியுள்ள 'பரியேறும் பெருமாள்' படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.
புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் சார்பில் இந்தியத் திரைப்பட விழா-2019, ஐந்து நாட்களுக்கு புதுச்சேரி முருகா திரையரங்கில் நடைபெறுகிறது.
இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுவையில் மட்டும் தான் 36 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுவையில் இளைய சமுதாயத்தினரிடம் நல்ல சினிமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இந்தியாவின் அனைத்து மொழி மக்களின் வாழ்வுநிலையும், பழக்கவழக்கங்களை அறியவும், ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அனைத்து மொழி திரைப்படங்களும் இங்கு திரையிடப்படுகின்றன.
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை அரசு அத்திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்தைத் தேர்வு செய்து விருது வழங்குகிறது.
வரும் 13-ம் தேதி மாலை முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் விருதை முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார். 2018-ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்காக அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பெறுகிறார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் விழாவில் தரப்படுகிறது.
நாள்தோறும் மாலை 6 மணிக்கு முருகா திரையரங்கில் இலவசமாகத் திரையிடப்படும் படங்கள்:
செப்டம்பர் 13- ம் தேதி - பரியேறும் பெருமாள் (தமிழ்).
செப்டம்பர் 14- ம் தேதி - நகர்கீர்த்தன் (வங்காளம்).
செப்டம்பர் 15- ம் தேதி- சூடானி ப்ரம் நைஜீரியா (மலையாளம்).
செப்டம்பர் 16- ம் தேதி - மகாநடி (தெலுங்கு).
செப்டம்பர் 17- ம் தேதி- ராஜி-Razzi (இந்தி).
-செ. ஞானபிரகாஷ்