Published : 10 Sep 2019 08:01 PM
Last Updated : 10 Sep 2019 08:01 PM

மோட்டார் வாகன விற்பனையில் சரிவு ஏன்?- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் 

சென்னை,

மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவது மற்றும் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவன வாடகை கார்களை அதிக அளவில் பயன்படுத்துவதுதான் மோட்டார் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவுக்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மோட்டார் வாகன விற்பனை, மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலையைப் போக்க அரசு விரைவில் சில அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2-வது முறையாகப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''சில துறைகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை குறித்து அத்துறையைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவெடுக்கும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக நுகர்வு தேவைப்படுகிறது. அரசு செலவுகளை அதிகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும். எனவே தான் நாட்டில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது.

நுகர்வோர் நம்பிக்கையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் இருந்த பொதுத்துறை வங்கிகளில் சில வங்கிகளில் நல்ல சேமிப்பு கிடைத்த போதிலும், அந்த வங்கிகளிடமிருந்து கடன் கேட்டு பெருமளவிற்கு யாரும் முன்வராத நிலை உள்ளது. அதிக கடன் கேட்டு வரும் வங்கிகளிடம் போதிய சேமிப்பு நிதி இல்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யவே பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதனால் ஒவ்வொருவரும் மற்றவர் மூலம் பயனடைவர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் ஏற்றம் இறக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அடுத்த காலாண்டில் வளர்ச்சியை அதிகரிக்க முழு கவனம் செலுத்தப்படும்.

ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு நிதி பெறுவதால், எவ்வித பின்னடைவும் ஏற்படாது. ரிசர்வ் வங்கியின் வல்லுநர் குழுதான், பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, அரசுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கான நடைமுறையையும் வகுத்தது. சிக்கலான காலகட்டங்களில் ரிசர்வ் வங்கி நிதியை அரசு பயன்படுத்துவதில் தவறு ஏதுமில்லை. எல்லா ஆட்சிகளிலும் இது போன்று பணம் எடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. தங்கத்திற்கான மூலப்பொருள் நம் நாட்டில் இல்லை என்பதாலும், முற்றிலும் இறக்குமதியை சார்ந்திருப்பதுமே விலை அதிகரிப்புக்குக் காரணம். மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை போன்றவற்றின் அடிப்படையிலும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் ஆபரணத்திற்காக மட்டுமின்றி, சேமிப்புக்கான ஒரு வழியாகவும் தங்கம் வாங்கப்படுகிறது.

காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்ததால்தான் அது ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டிருப்பதால் அம் மாநிலத்திற்கான நிதி ஆதாரங்கள் பாதிக்கப்படாது. 15-வது நிதிக் குழு இது குறித்து பரிசீலித்து உரிய நிதியை ஒதுக்கும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்டது போல மற்ற மாநிலங்கள் ஆக்கப்பட மாட்டாது.

சென்னை – ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகங்களுக்கு இடையே நேரடி கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து கடந்த 2016-17-லேயே ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் உள்ள தொழிலதிபர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆலோசனை நடத்தி, புதிய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஓராண்டு காலத்தில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து ரஷ்யாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்துடன் நேரடிக் கப்பல் போக்குவரத்து காரணமாக சென்னை துறைமுகத்தில் இறக்குமதி அதிகரித்து வளர்ச்சியடைவதோடு பொருளாதாரமும் பன்மடங்கு வளர வாய்ப்பு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரி பாக உற்பத்தி தொழில் நல்ல வளர்ச்சியில் இருந்தது. பதிவுக் கட்டணம், பிஎஸ்-6 போன்ற பிரச்சனைகள் காரணமாகவும், பணம் வைத்திருப்போர் புதிதாக கார் வாங்கி முதலீடு செய்வதை விரும்பாமல், மெட்ரோ ரயில் மற்றும் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவன வாடகை கார்களை அதிக அளவில் பயன்படுத்துவதுதான் இத்துறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்குக் காரணம்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அரசு உரிய ஆலோசனை நடத்தி 2 முறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

முத்ரா கடன் உதவி திட்டம் மூலம் பெண்கள் அதிக அளவில் பயனடைந்துள்ள போதிலும், முறைசாரா அமைப்புகளில் வேலைவாய்ப்புகள் பெற்றவர்கள் பற்றிய முழுமையான புள்ளிவிவரம் அரசிடம் இல்லை. தற்போதுள்ள நடைமுறைகள்படி முறைசார்ந்த அமைப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களே அரசிடம் உள்ளன.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பாரம்பரிய தொழில்களை அழிவிலிருந்து காப்பாற்ற மத்திய பட்ஜெட்டில் SFURTI (Scheme of Fund for Regeneration of Traditional Industries) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அதிகாரிகள் இது பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உதவத் தயார்''.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x