Published : 06 Jul 2015 06:25 PM
Last Updated : 06 Jul 2015 06:25 PM

விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க பயிர் கடன்களை தள்ளுபடி செய்க: ராமதாஸ்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இதற்காக விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்த மதியழகன் என்ற விவசாயி கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இவர் குடவாசல் தெற்கு ஒன்றிய பாமக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளம் விவசாயியான மதியழகன் 5 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். அதற்காக பெருமளவில் கடன் முதலீடு செய்திருந்த மதியழகன் பருத்தி சாகுபடியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கடனை அடைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், எதிராபாராத மழையால் பருத்திப் பயிர்கள் உதிர்ந்து விட்டதால் அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

ஏற்கெனவே கடன்சுமையால் திணறிக் கொண்டிருந்த மதியழகன் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் மதியழகனின் நிலையில் தான் உள்ளனர்.

ஒரு பக்கம் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் வறட்சி, மறுபுறம் பருவம் தவறி பெய்யும் மழையால் பயிர்கள் சேதமடைவது என விவசாயிகள் தொடர்ந்து கடன் வலையில் தள்ளப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இதற்காக விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். அத்துடன் வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ. 15,000 வீதமும் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x