Published : 10 Sep 2019 05:37 PM
Last Updated : 10 Sep 2019 05:37 PM

700 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேசுவரம் பொந்தன்புளி மரத்தை பாதுகாக்க கோரிக்கை

ராமேசுவரம்

ராமேசுவரத்தில் உள்ள 700 ஆண்டு கால பழமை வாய்ந்த பொந்தன்புளி மரத்தினை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொந்தன்புளி மரங்களின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் அரேபியா தீபகற்பம் ஆகும். இதில் எட்டு இனங்கள் உள்ளன. அதில் ஆறு இனங்கள் மடகாஸ்காருக்கும், ஒன்று ஆப்பிரிக்காவிற்கும், மற்றொன்று அரேபிய தீபகற்பத்திற்கும் சொந்தமானது.

கீரையாக சமைத்து உண்ணக் கூடிய இலைகள், ருசி மிக்க பானம் தரக்கூடிய கனி, காகிதம், கயிறு, தயாரிக்கப் பயன்படக்கூடிய பட்டைகள், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை நீர் நிலையாக சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய அடிமரம் மேலும் பல்வேறு மருத்துவ பயன்பாடு மிக்க பொந்தன்புளி மரங்களை புவியியலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் எட்டாவது உலக அதிசயம் என்றே வர்ணித்தார்.

பாண்டிய மன்னர்கள் அரேபிய தீபகற்பத்தில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்து குதிரைகளை போர்ப்பயிற்சிக்கு வழங்குவதற்காக வாணிபத்திற்காக வந்த அரேபியர்களை நியமித்து அவர்களை குதிரைப்படைத் தலைவர்களாகவும் நியமித்தனர்.

இக்குதிரைகளுக்கு தீவனமாக பொந்தன்புளி மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் கொடுக்கப்படுவதற்காக அரேபிய தீபகற்பகத்திலிருந்து பொந்தன்புளி விதைகள் கொண்டுவரப்பட்டு பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் நடப்பட்டுள்ளன. இம்மரங்கள் சாதாரணமாக 1500 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை.

1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்டம் திருப்புடையார் கோவில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில் ராமேசுவரம் கடற்கரையில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கல கப்பலையும் அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சி ஓவியமாக இன்றும் பார்க்க முடியும்.

ராமேசுவரத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் பல பொந்தன்புளி மரங்கள் இருந்தன. ஆனால் இதில் பெருன்பான்மையான மரங்கள் மக்களின் அறியாமையின் காரணமாக அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகில் மட்டும் சுமார் 700 ஆண்டு கால பழமையான பொந்தன்புளி மரம் உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் இயற்கை கண். இளங்கோ கூறியதாவது, தமிழகத்தில் பொந்தன்புளி மரங்களை பற்றிய கணக்கெடுத்தபோது தனித்தனியாக ராமேசுவரம், பாம்பன், ராமநாதபுரம், தேவிப்பட்டிணம், பனைக்குளம் ராஜபாளையம், மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 20-க்கும் குறைவான மரங்கள் மட்டுமே கண்டறிப்பட்டுள்ளன. பல ஊர்களில் இம்மரங்கள் சுத்தமாக அழிந்துவிட்டன.

வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க 25 தலைமுறைகளைக் கண்ட ராமேசுவரம் பொந்தன்புளி மரத்தை வேலியிட்டு அழிவிலிருந்து பாதுகாக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், புதியதாக பல இடங்களில் பொந்தன்புளி மரங்களை நட்டுவைத்து வளர்க்கவும் வேண்டும், என்றார்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x