Published : 10 Sep 2019 04:57 PM
Last Updated : 10 Sep 2019 04:57 PM

மோடி அரசின் 100 நாள் சாதனை என்னென்ன?- பட்டியலிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2-வது முறை ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டாவது ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசின் சாதனைகள் என்னென்ன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் ஆட்டோமொபைல் துறை சரிவு, வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை சரி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டம்..

நாடு முழுவதும் ரு.100 லட்சம் கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உயர் மட்ட குழு ஒன்றை நியமித்துள்ளேன். இந்தக் குழு க்ரீன்ஃபீல்ட், பிரவுன்ஃபீல்ட் திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டும். ஒவ்வொன்றும் தலா ரூ.100 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

வங்கிகள் இணைப்பால் நன்மை..

சிறிய வங்கிகள் இணைப்பால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 5 லட்சம் கோடி பொருளாளார வளர்ச்சியை அடைவதை பிரதமர் இலக்காக நிர்ணயித்துள்ளார். அதற்கு சிறிய வங்கிகள் இணைப்பு உதவும். வளமான வங்கிகள்தான் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். வங்கிகளின் வளத்துக்கு இந்த இணைப்பு அவசியமானது. இருப்பினும், வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வரும் தேதி குறித்து அந்தந்த வங்கி வாரியம் முடிவு செய்யும்.

370 நீக்கம் ஜன சங்க காலத்து கொள்கை..

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது ஜனசங்க காலத்திலிருந்து எங்களின் கொள்கையாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும், பாஜக தேர்தல் அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டு வந்திருக்கிறது. எனவே, தேர்தல் வாக்குறுதிப்படியே 370 சட்டப்பிரிவை நீக்கியுள்ளோம்.

மேலும், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு 370 சட்டப்பிரிவு உதவிகரமாக இல்லை. அதனை நீக்கியுள்ளதாலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஜம்மு காஷ்மீரில் அமலுக்கு வந்துள்ளது. காஷ்மீரில், தேசிய மகளிர் ஆணையமும் செயல்படாமல் இருந்தது. இனி அதுவும் செயல்படும். 370 நீக்கத்தால் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். காஷ்மீரில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வருவார்கள்.

முத்தலாக் சாதனை..

பெண்களின் உரிமையை நிலைநாட்ட முத்தலாக் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. பாஜக ஆட்சியில்தான் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிதியுதவி..

விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 3 தவணையாக மொத்தம் ரூ.6,000 அளிக்கப்படுகிறது. இது தவிர ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது.

இதுதவிர ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அவசியமற்ற 59 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இஸ்ரோவின் சந்திரயான் திட்டம் 99% வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து இஸ்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும்.

வேலைவாய்ப்பு பிரச்சினைகளை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆட்டோமொபைல் துறை சரிவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஜிஎஸ்டி விதிப்பை 28%-ல் இருந்து 18%-ஆக குறைக்க வலியுறுத்துகின்றனர். ஆனால், ஜிஎஸ்டி முடிவை நான் மட்டுமே தனித்து எடுக்க இயலாது. இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x