

புதுச்சேரி
காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்து, பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கப் பிரிவால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தைக் கைது செய்தனர். ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம், தற்போது திஹார் சிறையில் உள்ளார்.
அதேபோல கர்நாடக முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் செப்டம்பர் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரின் கைதைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, ''இந்த நாட்டிலே வளர்ச்சியைக் கொண்டு வந்தவருக்கு, விதிமுறைகளின்படி செயல்பட்டவருக்கு, ஒரு தலைசிறந்த வழக்கறிஞருக்கு இந்நிலையை உருவாக்கியது பாரதிய ஜனதா கட்சி. அவர்கள் திட்டமிட்டு அரசியல் கட்சித் தலைவர்களைப் பழிவாங்குகின்றனர். இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
கர்நாடக மாநிலத்தின் அமைச்சராக இருந்த டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்தவர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு என்று பாஜக நடவடிக்கை எடுத்தபோது அதைத் தடுத்து நிறுத்தியவர். அவரைப் பழிவாங்கினர்; சிறையில் அடைத்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்து, பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது'' என்றார் நாராயணசாமி.