ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு

படம்: ஆர்.அசோக்
படம்: ஆர்.அசோக்
Updated on
1 min read

சென்னை

பிரபலமான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அல்லது விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில், காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. சமீபத்தில், கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், கண்டாங்கி சேலை, திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. புவிசார் குறியீடு மூலம், குறிப்பிட்ட ஒரு பொருளை போலியாக விற்பனை செய்வதில் இருந்து தடுக்க முடியும்.

இந்நிலையில், பிரபலமான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கோரி, அதனை வழங்கும் பதிவு அலுவலகத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு இன்று (செப்.10) புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால்கோவா தயாரிக்கப்படுகிறது. பல சிறு மற்றும் பெரிய அளவிலான தனியார் பால் பொருட்கள் நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன. இந்த பால்கோவா, இணையம் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் தனித்துவம் என்னவென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றி வளர்க்கப்படும் பசுக்களிலிருந்து கறக்கப்படும் பசும்பால் மூலமாக மட்டுமே இது செய்யப்படுகிறது. இந்தப் பால், அதிகாலையிலேயே பால் விற்பனையாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பெறப்படுகிறது.

இந்தப் பால், இயற்கையாகவே இனிப்புச் சுவையுடன் இருப்பதால், பால்கோவா செய்வதற்கு சிறிதளவு சர்க்கரையே சேர்க்கப்படுகிறது. இந்த பால்கோவா 7-10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in