செய்திப்பிரிவு

Published : 10 Sep 2019 14:51 pm

Updated : : 10 Sep 2019 14:52 pm

 

இலவச அரிசிக்கு பதிலாக இந்த மாதம் பணம்: கிரண்பேடி முடிவை ஏற்ற புதுச்சேரி அரசு

puducher-government-accepted-kiranbedi-s-decision
கிரண்பேடி மற்றும் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

இலவச அரிசிக்கு பதிலாக இந்த மாதம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் போட புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்து 39 மாதங்களாகின்றன. இதில் ரேஷனில் 17 மாதங்கள் அரிசியும், ஐந்து மாதங்கள் அரிசிக்கான பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளது.

அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தர துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியதாகவும், அரிசி தரமுடியாதற்கு அவரே காரணம் என்று ஆளும் அரசு குறிப்பிட்டது. அரிசி தொடர்பான கோப்புக்கு அனுமதியை கிரண்பேடி தரவில்லை என்றும் பேரவையில் குறிப்பிட்டனர்.

புதுச்சேரி அரசு தொடர்ந்து பயனாளிகளுக்கு இலவச அரிசி தர முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டு சட்டப்பேரவையில் அரசு தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு காங்கிரஸ், திமுக, எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகியோரும் ஆதரவு தந்தனர்.

இச்சூழலில் அரசு தீர்மானத்தை எடுத்துக்கொண்டு முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சமீபத்தில் சந்தித்தனர். ஆனால் கிரண்பேடி அரிசி தர மறுத்து விட்டதாக கூறி ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.


அதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "இலவச அரிசி திட்டத்தை எதிர்க்கவில்லை. புகார்களால் அரிசிக்கு பதிலாக பணம் தர கோருகிறோம். இரு தரப்பு வேறுபாடு நிலுவுவதால் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு பதில் வரும் வரை அரிசிக்கு பதிலாக பணம் தர கோரியுள்ளோம்", என்று தெரிவித்தார்.

இதனால் மீண்டும் இலவச அரிசியால் சர்ச்சை கிளம்பியது. இச்சூழலில் அரிசி விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தொடர்ந்து பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தர பாஜக வலியுறுத்தி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு அளித்தது. அதைத்தொடர்ந்து மனுவை விசாரித்து ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் தர தலைமைச் செயலருக்கு துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். இச்சூழலில் துணைநிலை ஆளுநர் முடிவை புதுச்சேரி அரசு ஏற்றுள்ளதாக தகவல் வெளியானது.

அரிசி விவகாரம் தொடர்பாக துறை அமைச்சர் கந்தசாமியிடம் கேட்டதற்கு, "இலவச அரிசிக்கு பதிலாக இந்த மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் தரப்படும். இலவச அரிசி திட்டத்தில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை. துணை நிலை ஆளுநருக்கு வந்துள்ள புகாருக்கு விசாரணை நடத்தினால் பதில் தர தயார்", என்று தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

கிரண்பேடிமுதல்வர் நாராயணசாமிKiranbediCM narayanasamy
Popular Articles

You May Like

More From This Category

More From this Author