செய்திப்பிரிவு

Published : 10 Sep 2019 13:49 pm

Updated : : 10 Sep 2019 13:49 pm

 

கூட்டணிக் கட்சியின் அழுத்தத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் கட்டுப்படாது: கே.எஸ்.அழகிரி 

k-s-alagiri-speech

தூத்துக்குடி

கூட்டணிக் கட்சியின் அழுத்தத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் கட்டுப்படாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தன்னுடைய எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளது. அங்கு திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஒரு மனதாக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இச்செய்தி, வெளியாகி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைமையிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது. இதுபற்றி கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நகரில் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.


திமுக கொடுத்த அழுத்தத்தால்தான் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலை மறுத்த அழகிரி, கூட்டணிக் கட்சியின் அழுத்தத்துக்கு காங்கிரஸ் ஒருபோதும் கட்டுப்படாது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், ''கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல; கடவுளே அழுத்தம் கொடுத்தாலும் காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவே காங்கிரஸ் இருக்கிறது. இந்நிலை விரைவில் மாறும்.

யாருக்குமே தெரியாமல் ஒரு தீர்மானத்தைப் போட்டு, அதைப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பது என்பது ஒழுங்கீனம். நான் தலைவரான பிறகு, கட்சிக்குள் எந்த ஒழுங்கீனத்தையும் அனுமதிப்பதில்லை. எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது.

நமக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால், அந்த உரிமைகளை எவ்வாறு பேச வேண்டும் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நமது தோழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

முன்னதாக, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு பிறகு, அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

K.s.alagiriகூட்டணிக் கட்சிஅழுத்தம்கே.எஸ்.அழகிரிகாங்கிரஸ்திமுக
Popular Articles

You May Like

More From This Category

More From this Author